Sunday, August 10, 2008

இது ஆரோக்கியமல்ல! - ஒரு எச்சரிக்கை!!


டாக்டர் எஸ்.ஷங்கர்


பணவீக்கம்: கண்மூடித்தனமான பணக் கொள்கையும் ஆபத்தே!


அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணவீக்கத்தை 7 முதல் 5 சதவிகிதத்துக்குள் கொண்டு வரவே இந்த கடுமையான பணக்கொள்கையைக் கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம், என்ற அறிவிப்போடு சிஆர்ஆர், ரெபோ ரேட்டை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம், வங்கிகளுக்கு அளிக்கப்படும் ரொக்கத்துக்கான வட்டி விகிதம் இரண்டையுமே ரிசர்வ் வங்கி உயர்த்தியிருப்பதால் அடுத்து வரும் நாட்களில் வங்கிகள் வழங்கப்போகும் பல வகைக் கடன்களுக்கான வட்டிகளும் கணிசமாக உயர்த்தப்பட உள்ளன.

வீட்டுக் கடன், வணிக விரிவாக்கக் கடன்கள், புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கான கடன்கள், தனிநபர், நுகர்வோர் கடன்கள் அனைத்துக்குமே தற்போது வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தில் குறைந்தபட்சம் 3 சதவிகிதம் வரை வட்டியை உயர்த்த உள்ளதாக வணிக வங்கிகள் கூறுகின்றன.
இது ஒரு உத்தேசம்தான். இதைவிட இன்னும் கூடுதலாகக் கூட வட்டி விகிதங்கள் உயரக்கூடும்.
அதேநேரம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதனால் வெளியில் புழக்கத்திலுள்ள பணத்தில் ரூ.8000 கோடி வரை அடுத்த ஒரு மாதத்திலேயே உறிஞ்சப்பட்டு விடும், பணவீக்கமும் இரட்டை இலக்கத்திலிருந்து ஒற்றை இலக்கத்துக்கு வந்துவிடும் என ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது.

எண்கள் Vs எண்ணங்கள்!!
இந்த நிலை தொடர்ந்தால் ஆண்டு இறுதிக்குள் ரூ.50000 கோடி வரை பணத்தை உறிஞ்சிவிட முடியும். பணப் புழக்கமும் குறையும், பணவீக்கமும் கட்டுக்குள் வரும். இது நடைமுறையில் சாத்தியம்தான் என்றாலும், நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்காது என பொருளியல் நிபுணர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.

Combined Economic Measure அதாவது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சரிசமமான பன்முக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பிரயோகிப்பது மட்டும்தான் ஆரோக்கியமான பணவீக்கத்துக்கு வழிவகுக்கும், என்கிறார்கள்.

இதற்கு quantitative measures எனப்படும் சிஆர்ஆர், ரெபோ ஆயுதங்கள் மட்டும் போதாது. Qualitative measures எனப்படும் வேறு சில சிந்தனை சார்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் ஒரு சேரக் கையாளுதல் அவசியம்.
இதை இப்படி விளக்கலாம்...
எல்லா கடன்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு வட்டி விகித்தை உயர்த்துவது quantitative என்றால், விவசாயம் மற்றும் அத்தியாவசிய முதலீடுகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தாமல் விடுவது qualitative. ஒன்று வெறும் எண்களைச் சார்ந்தது. அடுத்தது எண்ணங்கள் சார்ந்தது!

சிமெண்ட், இரும்பு, அலுமினியப் பொருட்களின் மீதான விலைகள் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றின் விலைகளில் மாறுதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது நடைமுறைப் பொருளாதாரத்தை சீராக வைத்திருக்க உதவும். ஆனால் வெறும் பணக்கொள்கையை மட்டுமே பயன்படுத்தி இதைச் சாதிக்க முடியாது.

உணவுப் பொருள் உற்பத்தி சார்ந்த துறைகளில் சலுகைகளையும், வட்டித் தளர்வுகளையும் அனுமதிக்கத்தான் வேண்டும். பொருளாதாரம் ஒருவித சமநிலைத் தன்மையில் இருக்க இந்த பன்முக பொருளாதார நடவடிக்கைகள் உதவும்.பொருளியல் நிபுணர்கள் கருத்து 'உடல் வீங்கிப் போயிருக்கிறதே என்று ஒரேயடியாக கொழுப்பை உறிஞ்சிவிட்டால் என்னாகுமோ அப்படி ஒரு எதிர்மறை விளைவை கடுமையான சிஆர்ஆர், ரெபோ ரேட் உயர்வு தோற்றுவித்து விடக்கூடும்.

நமக்கு கடந்த காலங்களில் அப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கருவிகளை தொடர்ந்து உபயோகிப்பது பணவாட்டத்துக்கும் வழி வகுத்துவிடும். இதுவும் நமக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது, என்கிறார் மாநிலக் கல்லூரியின் முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் பன்னீர்செல்வம்.
ஆனால் நமது நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தை மேலும் ஒரு கடுமையான சூழலுக்கு இட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தைத் தோற்று வித்துள்ளதாகக் கூறுகிறார் பேராசிரியர் பன்னீர்செல்வம். அப்படி என்ன அறிக்கை அது?

அரசு வங்கிகள் இனி தாராளக் கடன் வழங்கும் போக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்' -இதுதான் சிதம்பரத்தின் அறிக்கை.

சுருக்கமாக, இனி கடன் தாராதீர்கள் என்ற கசப்பான சிக்னலை சர்க்கரை முலாம் தடவிய வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் அமைச்சர். கிராமப் புறங்களில் ஏற்கெனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தி சார் நடவடிக்கைகளுக்குக் கடன் பெறுவோர் அரசு வங்கிகளிடம் கடன் பெறுவதற்குள் விழி பிதுங்கிப் போகிறார்கள்.
நகர்ப் புறங்களில், செல்வாக்குள்ள நபர்கள் மட்டுமே அதிகக் கடன் வசதிகளை அனுபவிக்கின்றனர்.

பேராசிரியர் பன்னீர் செல்வம் பெரிதும் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் அரசை நடத்துபவர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கான செலவைக் கடுமையாகக் குறைக்க வேண்டுமென்பது.

"100 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தைத் துவக்கி வைக்க 10 கோடி ரூபாயில் ஆடம்பர விழா எதற்கு? இந்த 10 கோடிதான் பணவீக்கத்துக்கு அச்சாரமிடுகிறது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் நடந்து கொள்கின்றன.
நமது அமைச்சர்கள், அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு, தமிழ்நாட்டின் பட்ஜெட் தொகைக்குச் சமம்!
அதேபோல, நாட்டில் பொருளாதார நெருக்கடி எனத் தெரிந்தும் அரசு ஊழியர்களுக்கு எதற்காக மிக அதிக அளவு சம்பளத்தை உயர்த்துகிறார்கள். அந்த நிதிச் சுமையையும் சிஆர்ஆர் மூலம்தான் குறைக்கப் போகிறார்கள் என்றால் இந்த சம்பள உயர்வு மிகப் பெரிய கேலிக் கூத்தல்லவா...!" என்கிறார்.
கண்மூடித்தனமான பிரயோகம்!இப்போது வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு, கடன் வசதிகளும் முடக்கப்பட்டால், பாதிப்பு யாருக்கு? பொருளாதாரத்தின் அடிமட்டத் தூண்களான உணவு உற்பத்தியாளர்கள்தான்...

6 மாதங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவிகிதமாகி விட்டது என எண் கணக்கை ஒப்பிப்பதால் மட்டும் என்ன நன்மை வந்துவிடப் போகிறது. எனவே பணவியல் கொள்கைகளை கண்மூடித்தனமாக நம்புவதைக் குறைத்துக் கொண்டு, ஆரோக்கியமான பணவீக்க நிலை நிலவ, பன்முக பொருளாதார நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்!
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

No comments: