Sunday, August 10, 2008

பணவீக்கம்: சிஆர்ஆர், ரெபோ ரேட் அதிகபட்ச உயர்வு!

கிட்டத்தட்ட 12 சதவிகிதத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்), வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் (ரெபோ) இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய ரிசர்வ் வங்கி இன்று உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்து 5 சதவிகித அளவுக்குக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விகிதங்களின்படி ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி அதாவது ரெபோ ரேட் விகிதம் இனி 50 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 8.5-லிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பின் அளவு அதாவது சிஆர்ஆர் இதுவரை 50 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 30 முதல் அது 25 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு 8.75லிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதேநேரம் வெளியிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் ரொக்கத்துக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் (RRR – REVERSE REPO RATE) எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை.
வழக்கம்போல 6 சதவிகிதம்தான் இனிமேலும் தரப்படும். அதேபோல வங்கி விகிதமும் (BANK RATE - நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நீண்ட காலக் கடன்கள்) மாறாமல் அதே 6 சதவிகிதத்தில் நிலைத்திருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்க அளவை 7 முதல் 5.5 சதவிகிதத்துக்குள் கொண்டு வந்துவிட வேண்டும், அதே நேரம் நாட்டின் மொத்த உற்பத்தியை 8 சதவிகித அளவில் நிலைபெறச்செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டுதான் சிஆர்ஆர் மற்றும் ரெபோ ரேட் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இனி வங்கிகள் வழங்கும் அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் கணிசமாக உயர்த்தப்படவுள்ளன.

No comments: