Sunday, August 10, 2008

சற்றே 'வற்றிய' வீக்கம்: சிஆர்ஆர் மேலும் உயர்கிறது?


தொடர்ந்து வீங்கிக் கொண்டே போன இந்தியப் பொருளாதாரம் சற்றே வற்றத் தொடங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை மேலும் உயர்த்தும் யோசனையில் உள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. எல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் பெற்ற வெற்றியின் விளைவு என்று கூடச் சொல்லலாம்.
ஆனால் பணவீக்கம் ரொம்பக் குறைந்துவிட்டதாக சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டாம். 11.91 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் இந்த இரண்டு நாட்களில் 0.02 சதவிகிதம் அளவுக்குக் குறைந்து 11.89 சதவிகிதத்துக்கு வந்திருக்கிறது.

நாட்டில் அரசின் நிலைத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள், உணவு தானியங்கள், உணவு எண்ணெய், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களின் விலை நிலையில் இந்த வாரம் நிலையான போக்கு ஏற்பட்டுள்ளது.
வியாழனன்று வெளியிடப்பட்ட (இனி ஒவ்வொரு வியாழனன்றும் பணவீக்க நிலவரத்தை அரசு வெளியிட உள்ளது) மொத்த விலைக் குறியீட்டெண் (WPI) கணக்கீட்டின்படி, கடந்த வாரத்தில் உணவுப் பொருட்களின் விலையில் சராசரியாக 0.6 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
ஆனால் காபி மற்றும் அதன் உப பொருட்களின் விலை மட்டும் 0.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மின்சாரம், எரிபொருள்களின் விலைநிலையில் எந்த மாறுதலும் இல்லாததால், மற்ற பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள லேசான உயர்வு பெரிதாக விலைக் குறியீட்டெண்ணைப் பாதிக்கவில்லை. பெரிய அளவு மாற்றமிருக்காது!

எதிர்வரும் நாட்களில் பணவீக்கத்தின் நிலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதா, பொருளாதாரம் மேம்படுமா?இந்தக் கேள்விகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி இப்படி பதிலளிக்கிறார்:
இப்போது உலகப் பொருளாதாரமே, ஒருவித மந்த நிலையில் உள்ளது. இது இன்ஃபிளேஷனுமில்லை, டீஃபிளேஷனுமில்லை. ஸ்டேக்ஃப்ளேஷன். (பணவீக்கமும் இல்லை, பண மந்தமுமில்லை, பணவீக்க மந்தம்) அதாவது அதிகபட்ச பணவீக்கம், மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி.
அதனால் ஏற்பட்டுள்ள தேக்கம்தான் இன்றைய சர்வதேசப் பொருளாதார நிலை. இதுதான் இன்று உலகின் பல நாடுகளையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் பிரச்சினையும் இதுதான். ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டது இந்தியாவின் பிரச்சினை. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நிலை நாம் எவ்வளவோ மேல்!, என்கிறார் ரெட்டி.

பணவீக்கத்தின் அளவை இன்னும் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவர மேலும் 0.50 சதவிகிதம் அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் (சிஆர்ஆர்) மற்றும் ரெபோ ரேட் விகிதத்தைக் கூட்டக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: