Friday, August 29, 2008

பணிப் பெண்கள், இன்டர் நெட்: ரயில் பயணங்கள் இனி அலுக்காது!

புதுடெல்லி : இனி ரயில்களிலும் பணிப் பெண்கள், நொறுக்குத் தீனி வழங்கள், இண்டர்நெட், தொலைக்காட்சி என விமானத்தை விட கூடுதல் வசதிகள் வர உள்ளன.

ரயில் பயணங்களை இனி விமானப் பயணத்தைவிட மேம்பட்டதாக மாற்ற ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரயில்களில் பயணிகளுக்குச் சேவை செய்ய பணிப் பெண்களை நியமிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

ரயில்வே அமைச்சகமும் விரைவில் இதற்கு ஒப்புதல் கொடுக்கப் போகிறது. செப்டம்பர் மாதத்திலிருந்தே சதாப்தி, கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் மட்டும் பணிப் பெண்கள் அமர்த்தப்படுவர். அவர்கள் பயணிகளுக்குத் தேவையான காபி, டீ, நொறுக்குத் தீனி மற்றும் உணவு வகைகளை வழங்குவர்.

இதமான மெல்லிய இசையுடன், ரயில்களில் இண்டர்நெட், டிவி பார்க்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த வசதிகள் சாதாரண வகுப்பு பயணிகளுக்கும் கிடைக்கும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
நீல நிற கால் அங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை மற்றும் மேல்சட்டைகள் (பிளேசர்கள்) அணிந்து ரயில் பணிப் பெண்கள் சேவை செய்வர்.
உலகிலேயே இந்திய ரயில்வேயில்தான் முதன்முறையாக இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இது குறித்து ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் மிகப் பெரிய துறையான இந்திய ரயில்வேயை சிறந்த முன்னோடி போக்குவரத்தாக மாற்றவே இந்த மேம்பட்ட சேவைகளை வழங்கவிருக்கிறோம்.

முதலில் 'கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ்' மற்றும் 'மேற்கு வங்க எக்ஸ்பிரஸ் ரயில்' களில் இத்திட்டம் அறிமுகமாகும். செப்டம்பர் 20 முதல் இண்டர்நெட், தொலைக்காட்சி வசதி அறிமுகப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: