Saturday, August 30, 2008

சிங்கூரில் டாடா நானோ பணிகள் முடங்கின!

சிங்கூர்: திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வரும் தொடர் தர்ணா போராட்டத்தால் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையில் 2-வது நாளாக பணிகள் முடங்கியது. இதனால் நானோ தொழிற்சாலையில் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
சிங்கூரிலிருந்து நானோ தொழிற்சாலையை மாற்றக் கோரியும், விவசாயிகளிடமிருந்து வாங்கிய 400 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரக் கோரியும், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சிங்கூரில் காலவரையற்ற தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் தனது தொழிற்சாலைக்கு வரும் தொழிலாளர்களையும், பணியாளர்களையும் த்ரிணாமூல் தொண்டர்களும், உள்ளூர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலரும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதனால் அவர்களால் வேலைக்கு வர முடியவில்லை. நேற்று முதல் நானோ தொழிற்சாலையில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இன்றும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இப்போதைக்கு பணிகளைத் தொடங்க உகந்த நிலை சிங்கூரில் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலையை தஙகள் மாநிலத்துக்கு மாற்றிவிடுமாறு பல்வேறு மாநில முதல்வர்களின் அழைப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

No comments: