Monday, August 25, 2008

இந்தியா - 62: பொருளாதார சுதந்திரம் எப்போது?

டாக்டர் எஸ். ஷங்கர்
இவர்கள் வல்லரசாகப் போகிறார்களா... சும்மா ஜோக் பண்ணாதீங்க. தங்களுக்குள் இருக்கிற ஜாதியையும் வறுமையையும் ஜெயிக்க முடியாத இவர்கள் என்றைக்கு உலகை ஜெயிப்பது?
– 2020-ல் இந்தியா உலகின் வலிமை மிக்க வல்லரசாகிவிடும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவைக் கேலி செய்து இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட ஒரு கட்டுரையின் சாரம் இதுதான்!
ஆனால் கங்காரு தன் குட்டியைச் சுமப்பது போல, ஒரு பக்கம் தன் வறுமையைச் சுமந்து கொண்டே, லஞ்சம், வகுப்புவாதம், மொழி வெறி, ஜாதித் துவேஷம், எப்போதும் வளர்ச்சிக்கு நந்திகளாய் திகழும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என எக்கச்சக்க ஸ்பீட் பிரேக்கர்களைத் தாண்டி இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறது இந்தியா.

அப்படியென்றால் நாம் உண்மையிலேயே வளர்ந்து விட்டோமா... நாம் வளர்ந்துவிட்ட மாயம் நமக்கே புரியாமல்தான் இருக்கிறோமா...
இந்தியப் பொருளாதாரத்தின் நிஜமான வலிமை என்ன?

ஒரு சின்ன பிளாஷ்பேக்...
டாக்டர் ராபின்ஸன் மற்றும் எம்.என். ராயின் வார்த்தைகளில் சொல்வதானால், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனத்தை பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கிய 17-ம் நூற்றாண்டில், அமெரிக்கா என்ற தேசமே பழங்குடியினரின் பூமியாய் இருந்த காலத்தில், உலகின் மொத்த உற்பத்தியில் பிரிட்டனின் பங்கு கிட்டத்தட்ட 2 சதவிகிதம். இந்தியாவின் பங்கு 22 சதவிகிதம். (அட, நாமதான் வல்லரசு அன்றைக்கு!)
இத்தனைக்கும் அன்று இந்தியா ஒன்றுபட்ட தேசமல்ல. 700க்கும் மேற்பட்ட சிற்றரசுகள், சுதந்திர சமஸ்தானங்கள் மற்றும் நிஜாம்களாக இருந்தது. அப்படி பிளவுண்டு கிடந்த தேசத்தின் பொருளாதார வளத்தை மொத்தமாக கணக்கெடுத்துச் சொன்னவரும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிதான். அந்தப் புள்ளி விவரங்கள்தான் இந்தியாவின் மீது பிரிட்டிஷ்காரர்களின் பிடி இறுகக் காரணமாகிவிட்டது.

அடுத்து வந்த 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் உலகப் பங்களிப்பு 9 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தியா பின்னடைந்த நாடுகளுள் ஒன்றாக மாறிப்போனது.
பெருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த தேசம் பிற்போக்கு சக்திகளின் பிடிக்குள் போய்விட, மதங்களும் ஜாதீயமும் பொருளாதாரத்தின் வேரறுத்து, வளர்ச்சியை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன... போகப்போக உலகின் குப்பைத் தொட்டியாகி வறுமை, நோய்களின் தேசமாக மாறிப்போனது...’
- எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
ஜனநாயகம் இப்போது வேண்டாம்!
நேரு, இந்திராவின் காலத்தில் பொருளாதாரம் முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே பிரதானப்படுத்தியபடி நகர்ந்தது. அவர்களின் காலத்தில் வளர்ச்சிக்கான முயற்சிகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டன என்பதை விட SURVIVAL FACTORS-க்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
குற்றுயிரும் குலையுயிருமாக வந்த இந்தியப் பொருளாதாரத்தை உயிரோடு வைத்துக் கொள்வதில் நேரு மிகுந்த அக்கறை காட்டினார். இந்திராவோ பொருளாதாரத்தோடு சேர்த்து தன் அரசியலையும் உயிருடன் வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருந்தது.
இதனால்தான் ஒரு கட்டத்தில், இந்தியாவுக்கு மக்களாட்சி முறை பொருந்தாது என அவர் முடிவு செய்து அதை செயலிலும் காட்ட முயன்று தோற்றார் (ஏதாவது ஒரு பக்கத்திலாவது முழுமையாக எதிர்ப்புகளே இல்லாமல் இருந்தால், என்னால் இந்தியாவில் பல மாறுதல்களைக் கொண்டுவர முடியும் – பிரதமர் இந்திரா காந்தி, 1975).
‘இந்தியா போன்ற பின்தங்கிய, விழிப்புணர்வற்ற தேசத்துக்கு கொஞ்சகாலம் சர்வாதிகாரமே சிறந்தது. சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்திய பிறகு, ஜனநாயகத்தைக் கொண்டுவரலாம்’ என்ற Hardliner சஞ்சய் காந்தியின் யோசனைகள் இந்திராவுக்கும் சரியாகவே தோன்றின அன்றைக்கு.

இந்த முடிவுக்கு அவர் வர இன்னொரு முக்கியக் காரணம், அடுத்தடுத்து இரு ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.
ஒரு குழந்தையை ராணுவக் கட்டுப்பாட்டோடு வளர்த்து பின்னர், சாதாரண வாழ்க்கைக்குத் திருப்புவது ஒரு வளர்ப்பு முறை.
வறுமை, பசி, வன்முறை, நிச்சயமற்ற நிலை போன்ற முரட்டுச் சூழலில் வளர்த்தெடுப்பது ஒரு முறை.
இந்திரா காந்தி இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க விரும்பியது முதல் சூழலில். ஆனால் தன் முயற்சிகள் தோற்றதைப் பார்த்த பிறகுதான் போக்கை மாற்றிக் கொண்டார். இந்தியப் பொருளாதாரம் கடுமையான இந்த இரண்டாவது சூழலிலேயே வளரட்டும் என விட்டுவிட்டார்.
விளைவு, 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வெற்றி கண்டோம். பசுமைப் புரட்சியால், உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவும் பெற்றோம்.

இது ராஜீவ் போட்டுக்கொடுத்த ரூட்!
சுதந்திர இந்தியாவின் சிற்பி என நேருவைப் புகழந்தாலும், நவீன இந்தியாவின் சிற்பி என்னமோ ராஜீவ் காந்திதான். இந்த வாதம் உங்களுக்கு சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ராஜீவ் தன் ஆட்சிக் காலத்தின் இறுதி நாட்களில் செய்த தவறுகள், அவரது அரசியல் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் இங்கே வேண்டாம்.
அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இன்றைய பொருளாதார வளர்ச்சி (மற்றும் பணவீக்க நெருக்கடி) இரண்டுக்குமே ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ராஜீவ் காந்திதான்.
அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இன்று உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் டாப் 10 நாடுகளுள் நாமும் ஒன்றாக மாறியிருக்கிறோம்.

கனவு மெய்ப்பட...
ராஜீவ், விபி சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் என பிரதமர்கள் மாறினாலும் பொருளாதார வளர்ச்சிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் போராட்டத்துக்கு நடுவே வளர்ந்த பொருளாதாரம் என்பதால் எந்தத் தடுமாற்றத்தையும் தாங்கும் சக்தியைப் பெற்றுள்ளோம்.
‘பொக்ரான் அணு சோதனை – இந்தியா மீது பொருளாதாரத் தடை’ அதையும் தாங்கிக் கொண்டோம். அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் மேலும் சில தடைகள், அதையும் தாங்கினோம். காட் ஒப்பந்தத்தில் இந்தியாவை கொண்டுபோய் வகையாகச் சிக்க வைத்தார்கள், அதையும் சமாளிக்கிறோம். ஐஎம்எப், உலக வங்கி இரண்டும் கழுத்துக்கு வைத்த கத்திகளிலிருந்தும் தக்க நேரம் பார்த்துத் தப்பித்துக் கொண்டோம்.
இடையில் ஓயாத மதச் சண்டைகள், அரசியல் நிலையில்லாமை.... இதுவும் கடந்து போகும் என்ற தத்துவத்தைச் சொல்லியபடி அவற்றையும் தாண்டி பயணத்தைத் தொடர்கிறோம்.
அதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

கடுமையான சூழலில் வளரும் ஒரு மனிதன் எந்தச் நெருக்கடியையும் சமாளிக்கும் அளவு தெளிவாக இருப்பான் அல்லவா... இந்தியப் பொருளாதாரமும் அப்படி ஒரு நிலைக்கு வரும் என்பதுதான் 2020-ல் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியபோது டாக்டர் கலாமின் எதிர்பார்ப்பாக இருந்தது.

‘வெறும் கனவல்ல நான் காண்பது... இந்தியாவின் வரலாற்றைப் படித்தவன். சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்தியா வல்லரசாவது 2020-ல் நிச்சயம் நடக்கும்’, என்கிறார் கலாம் இப்போதும் அதே உறுதியுடன்.

ஆனாலும் நம்மை நாமே பல விஷயங்களில் வென்று வரவேண்டிய கட்டாய சூழல் இன்றைக்கு. கலாமின் கனவு நிறைவேறும் முன் நாம் நிச்சயமாக வெல்ல வேண்டிய தீய சக்திகள் இவைதான்...
பல பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்தியாவில் குவிகிறது. 2000 புள்ளிகளுக்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருந்த பங்குச் சந்தை 15000 புள்ளிகளைத் தாண்டிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் வறுமை வாட்டுகிறது.

ஐடி, எஞ்சினியரிங் பட்டதாரிகள் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க, அரசு கலைக் கல்லூரிகளில் படித்தவர்கள் சம்பளம் 3000 ரூபாயைத் தாண்ட யோசிக்கிறது.
3.5 கோடி பேர் நல்ல சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், 350 மில்லின் மக்கள் இன்னும் வறுமையில் கிடக்கிறார்கள். 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்தியா என்ற தேசம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டுக் கிடந்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையைச் சொன்ன பாரதிக்குப் பின் வந்த காலத்தில் கல்வியில் தாழ்வுற்ற நிலையிலிருந்து மீண்டிருக்கிறோம்.
இன்று நம் அறிவுக் கண்கள் திறந்தேயிருக்கின்றன. ஆனால் தெரிந்தே மூடத்தனத்தை ஆராதிக்கும் போக்கு... அதிலிருந்து விடுபடுவது மிக முக்கியம்.
இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும்போதே நாடி நரம்புகள் முறுக்கேறி உணர்ச்சி வசப்படுவதெல்லாம் சரிதான்... ஆனால் பக்கத்து மாநிலத்துக்காரனுக்குத் தண்ணீர் தரவேண்டுமென்றதும் பஸ்களையும் அப்பாவிகளையும் கொளுத்தும் பிற்போக்குத் தனத்தை எப்போது விடப் போகிறோம்?
கல்வி வேலை வாய்ப்புகளில், தமக்குக் கீழே உள்ள சக இந்தியன் ஒருவன் மேலேறி வரட்டும் என பரந்த மனப்பான்மையோடு எப்போது கைகொடுக்கப் போகிறோம்? அல்லது அப்படிக் கைகொடுக்கும் அரசின் முயற்சிகளை எப்போது முடக்காமல் இருக்கப் போகிறோம்?
அரசு நடப்பது லாப நஷ்டக் கணக்கு பார்க்க அல்ல... இது மக்கள் பணத்தில் நடக்கிற அரசு. பெட்ரோலியம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறபோது மக்களுக்காக மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்து, பணவீக்கம் குறைய எப்போது உதவப் போகின்றன?
முதலில் இவற்றை வென்றால்தான் நாம் உலகப் பொருளாதாரத்தை நிஜமாகவே வென்றெடுக்க முடியும். அந்த வெற்றியையும் உணர, அனுபவிக்க முடியும்!
ஜெய்ஹிந்த்!

No comments: