Sunday, August 10, 2008

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

பேரலுக்கு 120 டாலரானது கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெயின் விலை மேலும் 4 டாலர்கள் குறைந்து பேரலுக்கு 120 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்த அளவு விலை குறைவது இதுவே முதல் முறை.
ஜூலை மத்தியில் 147 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கப் பொருளாதாரத்தின் இறங்குமுகம் மற்றும் அமெரிக்கர்களின் நுகர்வுக் குறைவு காரணமாக 27 டாலர்கள் குறைந்துள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர்களுக்குள் வந்துவிடும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பயமுறுத்தும் ஈரான்!
ஆனால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைவதும், விண்ணைத் தொடுமளவுக்கு உயர்வதும் இப்போது ஈரானின் கையில் உள்ளதாக உலக நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. காரணம் தனது அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனை முயற்சிகளை இன்னமும் அந்நாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அணு ஆயுத சோதனையை ஈரான் நிறுத்திக் கொள்ள இந்த வார இறுதி வரை ஐநாவின் பாதிகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்த உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி போன்றவை கெடுவிதித்திருந்தன. ஆனால் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை ஈரான். இதனால் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்கத் தயாராகிறது ஐ.நா. (அதாவது அமெரிக்காவும் இங்கிலாந்தும்!)

ஈரான் மீது போர்தொடுக்கும்படி ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஒருவேளை நிலைமை எல்லை மீறிப்போனால், ஹோர்மோஸ் (Hormoz) நீர் சந்திப்பை ஈரான் தகர்க்கும் அபாயமுள்ளது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்குத் தேவையான 40 சதவிகித கச்சா எண்ணெய் ஓபெக் (OPEC) நாடுகளிலிருந்து வந்தாக வேண்டும். ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த வழித்தடத்தை ஈரான் அடைத்துவிட்டாலோ அல்லது அந்த வழியாக வரும் டேங்கர் கப்பல்களைத் தகர்க்க ஆரம்பித்துவிட்டாலோ, எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிடும்.
எனவேதான் ஈரான் மீதான நடவடிக்கையை இன்னும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றன அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!

No comments: