Friday, August 29, 2008

பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்தது!

உணவு அல்லாத உற்பத்திப் பொருட்களின் விலை யில் ஏற்பட்டுள்ள திடீர் விலைக் குறைவு காரணமாக பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடாந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 12.63 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச பணவீக்க அளவு இது.
இந்த வாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மற்ற 30 முக்கியப் பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கனிமப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம், எண்ணெய், உலோகமல்லாத கனிமங்கள் ஆகியவற்றின் விலை எதிர்ப்பார்ப்புக்கு மாறாக குறைந்து காணப்பட்டது.

இதன் விளைவாக பணவீக்கமும் 0.23 சதவிகிதம் குறைந்து 12.40-க்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது உண்மையில் மிக நல்ல அறிகுறி. இப்போதுதான் ஓரளவு நிம்மதியாக உணர்கிறேன். வரும் நாட்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறேன், என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் போக்கு தற்காலிகமானது என்றும், பணவீக்கம் 14 புள்ளிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியது நினைவிருக்கலாம்.
உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் ஏற்படக்கூடிய விலைக் குறைவுதான் பணவீக்கத்தின் போக்கை தீர்மானிக்கும் நிஜ காரணிகள். அதில் ஒரு நிலைத் தன்மை வரும்வரை இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தொடரும், என்கிறார் ரங்கராஜன்.
பணவீக்கத்தின் போக்கை மேலும் குறைக்க வங்கி வட்டி, மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயர்த்தும் திட்டத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி.

No comments: