Saturday, August 30, 2008

அண்ணா நூற்றாண்டு விழா: ரூ.1-க்கு கிலோ அரசி!!

சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக,நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

அதேபோல, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.2 வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிலோ அரிசி ரூ.1க்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைக்காரர்கள் பயனடைவார்கள்.

இது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிலோ அரிசி ரூ.2க்கு தற்போது வழங்கி வருகிறது.

இந்நிலையில் விலையை மேலும் குறைத்து ரூ.1க்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி குறித்து வதந்தி:

முன்னதாக முதல்வர் கருணாநிதி குறித்து சென்னையின் சில இடங்களில் இன்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று சிலர் முதல்வர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பினர். இதையடுத்து திமுக கொடிக் கம்பங்களில் இருந்த கொடிகளை அரைக் கம்பத்திலும் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அது வதந்தி என்று தெரிய வந்ததால் உடனடியாக கொடிகள் சரியான முறையில் பறக்க விடப்பட்டன.

No comments: