Sunday, August 10, 2008

இந்த வீக்கம் எப்போது குறையும் - 2

டாக்டர் எஸ்.ஷங்கர்


சீனாவின் அனுபவங்களிலிருந்து...

இந்தப் பகுதியைத் தொடருமுன் ஒரு ஷாக்கான சமாச்சரத்தை விளக்கிவிடுவது உத்தமம் என நினைக்கிறேன்.

கட்டுரையின் முதல் பகுதியில், சிஆர்ஆர் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தேன். நமது நிதியமைச்சர் எந்த அளவு இதில் விளையாடியிருக்கிறார் என்ற உண்மையைக் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லாமல், உங்கள் ஊகத்துக்கே விட்டுவிட்டிருந்தேன்.

நண்பர்களும், எனது முன்னாள் வகுப்புத் தோழர்களாக இருந்து இப்போது மாநிலக் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் தொலைபேசியில் வலியுறுத்தியதால் அந்த ஒரு விஷயத்தை மட்டும் சற்றே விளக்கிவிட்டு, அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்...

ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது, மற்றும் நேற்றைய, நாளைய கடன்கள் மீதான வட்டியை அதிகரிப்பது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முழுமையான கருவியாகிவிடாது. ஆனால் நம் நிதி மந்திரி அதைத்தான் முழுமையாக நம்புகிறார்.

சிஆர்ஆரை ஏதோ இப்போதுதான் உயர்த்தியிருப்பது போல நமக்குத் தெரிகிறது. ஆனால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்றே ப.சிதம்பரம் இதுகுறித்த லேசாக கோடி காட்டிவிட்டார்.

அன்றைய தேதியில் ரிசர்வ் வங்கியின் சிஆர்ஆர் 7.5 சதவிகிதம். இப்போது 8.5. ஜூலைக்குள் இது 8.75! எவ்வளவு உயர்ந்திருக்கிறது... கிட்டத்தட்ட 1.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் .75 சதவிகிதம் மக்களுக்குத் தெரியாமலேயே அல்லது அதிக ஆர்ப்பாட்டமின்றி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஆபத்து.

அதாவது நிதியமைச்சர் ஜூன் 17-ம் தேதி பாராளுமன்றத்தில் சின்னதாக ஒரு அறிவிப்பு கொடுத்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் 0.5 சதவிகிதம் சிஆர்ஆர் உயர்த்தப்பட்டுள்ளது!இதன் விளைவு இன்னும் சில தினங்களிலேயே தெரியத் தொடங்கும். என்னப்பா, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைக் கண்ணுல பார்க்கவே முடியலையே என்பது போன்ற முணுமுணுப்புகள் கிளம்ப ஆரம்பித்துவிடும்.

சிஆர்ஆரை உயர்த்திக் கொண்டே போனால், அதன் முடிவு?இப்போது பணவீக்கம் மாதிரி, அடுத்து பணத்தேக்கம் வந்துவிடும். நாட்டின் மொத்தப் பண சுழற்சியும் சுருக்கப்பட்டு பணம் மொத்தமும் ரிசர்வ் வங்கியில் தேங்கிப் போக பொருளாதாரம் முடங்கிப் போகும். அப்போதும் பாதிக்கப்படப் போவது நடுத்தர, ஏழை மக்கள்தான். பணக்காரர்கள் சமாளித்துக் கொள்ளலாம்.

சரி, என்னதான் செய்ய வேண்டும்?

நோஞ்சானாக இருப்பதும் ஆபத்து, வீங்கி வெடித்துப் போகும் அளவுக்குப் பருமனாக இருப்பதும் ஆபத்து. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உடலை வைத்துக் கொள்வதே ஆரோக்கியம் என்பது போலத்தான், பண வீக்கத்துக்கு எதிரான பொருளாதா நடவடிக்கைகளும் அமைய வேண்டும் என்கிறார் நவீன பொருளியலின் தந்தை எனப்படும் ஜான் மேனார்டு கீன்ஸ்.

எத்தனை அனுபவப் பூர்வமான நிஜம் கலந்த வாக்கு பாருங்கள்...

ஆனால் பொருளியலில் பிஎச்டி வாங்கிய நமது பிரதமரும் அவரது விசுவாச உதவியாளராக தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே குறியாகத் திகழும் ப.சிதம்பரமும் இதனை கவனத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

சீனா- ஒரு அருகாமை உதாரணம்.

குறைந்தபட்சம், பொருளியல் கோட்பாடுகளை திறமையாக, மக்களின் நலனுக்கேற்ப 'அப்ளை' செய்வதில்தான் ஒரு அரசின் நிஜமான வெற்றி இருக்கிறது என்கிறார் சீன அதிபர் ஹூ ஜின்டாவ். இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தகுதி வேண்டுமல்லவா...

இதோ சீனா என்னவெல்லாம் செய்து தன் பணவீக்கத்தைக் குறைத்தது என்பதைப் பார்ப்போம்... (சீனப் புகழ் பாடுவதல்ல நமது நோக்கம். ஒரு நாட்டின் பொருளியல் அனுபவங்களே அடுத்த நாட்டுக்குப் பாடமாகின்றன...)

அது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த காலம்...போரில் இரு துருவமாக நின்ற நேச நாடுகள் பெரும் வெற்றிப் பெற்று, போருக்குக் காரணமான ஹிட்லர் தலையிலான அச்சு நாடுகளை உலக வரைபடத்திலிருந்தே நீக்கிவிடும் வேகத்தோடு பல தடைகளை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது விதித்தன.

குறிப்பாக ஜெர்மனி மீதுதான் அதிகத் தடைகள். அதன் இயற்கை வளங்களைக் கூட அந்நாட்டில் விட்டு வைக்க மாட்டோம் என கொக்கரித்து, நிலக்கரிச் சுரங்கங்களை ஒரு நாடும், தங்க வயல்களை ஒரு நாடும், மற்ற கனிமங்களை ஒரு நாடும் பெர்லினில் அமர்ந்து கூறு போட்டுக் கொண்டன.

பெரும் பணவீக்கம் மட்டும்தான் ஜெர்மனி மக்களுக்கு மிஞ்சியது. அதுவும் எப்படிப்பட்ட பணவீக்கம் தெரியும்... நாமெல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு கேல்லப்பிங் வீக்கம் (குதிரைப் பாய்ச்சல்). கையில் பணமென்ற பெயரில் நிறைய காகிதங்கள். ஆனால் எந்தப் பொருளையும் வாங்க முடியவில்லை. அடுப்பெரிக்க விறகாகவும், டாய்ட்டில் பயன்படுத்தும் காகிதங்களாகவும் மாறிப்போயின ஜெர்மன் கரன்ஸி டாயிட்சே மார்க்.

நாடு பழையபடி பண்டமாற்று முறைக்கு மாறிக் கொண்டிருந்தது. நீ கோதுமை கொடுத்தால் நான் உனக்கு ரொட்டி தருவேன் என்கிற அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

பெர்லின் நகரில் இரு அண்ணன் தம்பிகள். அதில் மூத்தவன் போருக்கு முன்பே சொத்துகளைப் பிரித்துக் கொண்டு தனியாகப் போய் விட்டான். இளையவன் மகா குடிகாரன். குடித்துக் குடித்து பணம் முழுவதையும் காலி பாட்டில்களாக்கி வைத்திருந்தான்.

இந்தப் பெரும் பணவீக்கத்தின் போது எந்தப் பொருளையும் பணம் கொடுத்து வாங்க முடியாமல் ஜெர்மன்வாசிகள் துன்பத்திலிருக்க, இந்த குடிகாரத் தம்பி மட்டும் எப்போதும் போல சந்தோஷத்திலிருந்தான். தன்னிடமிருந்த காலி பாட்டிலகளைக் கொடுத்துவிட்டு ஃபுல் பாட்டில் வாங்கிக் குடித்து தன் சந்தோஷத்தைத் தொடர்ந்தானாம் (நன்றி – பேராசிரியர் டாக்டர் முகமது இஸ்மாயில்).

அந்த அளவு மோசமாக இருந்த ஜெர்மனியின் பணவீக்கம் அடுத்த சில ஆண்டுகளில் சீர்ப்பட்டது. எப்படி... கம்பைன்டு எகனாமிகல் மெஷர் எனப்படும் கூட்டுப் பொருளாதார நடவடிக்கைதான் காரணம்.

ஒரு நாட்டின் பொருளாதார அனுபவம்தான் அடுத்த நாட்டுக்கான பாடம்... இந்த முறை சீனா கையிலெடுத்த ஆயுதமும் இதே கூட்டுப் பொருளாதார நடவடிக்கையைத்தான். நாற்பதுகளில் ஜெர்மனி தன் துயரிலிருந்து மீள என்னென்ன செய்தார்களோ அதைத்தான் சீனா இப்போது செய்தது, செய்து கொண்டிருக்கிறது.

சீனாவின் பணவீக்கம் ஒரு கட்டத்தில் எப்போதுமில்லாத புதிய உயரத்தைத் தொட்டதை நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இதிலிருந்து தப்பிக்க, முதல் நடவடிக்கையாக, சிஆர்ஆரைத்தான் உயர்த்தியது சீனாவின் மக்கள் வங்கி (இங்கே ரிசர்வ் வங்கி மாதிரி).

ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இதை உயர்த்தவில்லை.

நுகர்வோர் கடன்களை முடக்கி வைத்தது. ஆனால் அதே நுகர்வோர் உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்குக் கேட்ட கடன்களை பழைய வட்டி விகிதத்திலேயே கொடுத்தது!

புதிய, அவசியமான கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு கடன் அளித்த்து, பழைய கட்டடங்களின் விரிவாக்கத்துக்கு கடன் மறுத்தது.

ஒவ்வொரு பொருளின் உற்பத்திச் செலவும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து உற்பத்தி நிறுவனங்களுக்குச் சொல்லிவிட்டது.

உதாரணம்: ஒரு செல்போனின் அடக்க விலை 1000 ரூபாய் என்றால் அதைப் பாதியாகக் குறைக்கச் சொன்னது அரசு. அது எப்படி முடியும்?

முடியும்... ஒரு பொபைல் போன் தயாரிக்க என்னென்ன மூலப் பொருட்கள் தேவை என்பதை ஆராய்ந்த ஒரு நிபுணர் குழு, பெரும்பகுதி செலவு பிடிப்பது ஆடம்பரத் தோற்றத்துக்காக வாங்கப்படும் மூலப் பொருட்கள்தான் என்பதைக் கண்டறிந்து அவற்றை நீக்கியது.

உற்பத்திச் செலவு குறைந்த அளவுக்கு, சந்தை விலையையும் குறைத்துவிட்டன நிறுவனங்கள்.

மக்களின் வாங்கும் சக்திக்கேற்ற விலைக்கே பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. இதே போல கட்டுமானத் துறையில், மூலப் பொருள்கள் உபயோகப் படுத்துவதில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியது மட்டுமல்ல, அப்படிச் செய்யப்படுகிறதா என்பதை ஒரு குழு வைத்துக் கண்காணித்தது.

இன்னொரு பக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஒரு நிலைக்குள் நிறுத்தி வைத்தது.

விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டன. வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு, அது சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது.

அரசு அதிகாரிகள், பெரும் அரசியல் பொறுப்பிலிருப்பவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான செலவு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டனர்.
ஏதோ, முதல்வன் படத்தில் அர்ஜூன் செய்த டிராமா சமாச்சாரங்கள் மாதிரி ஒரு ஃபீல் வருகிறதல்லவா... ஆனால் இது சத்தியமான உண்மை.

இன்னொரு பக்கம், உற்பத்தியல்லாத பிரிவினருக்கான வருவாயை நிலைப்படுத்துவதிலும் வெற்றி கண்டது சீனா.

நிரம்பிய ஏரியின் கரை உடையும் போது முன்பக்கம், பின்பக்கம் என அனைத்து பக்கமும் மணல் மூட்டைப் போட்டு உடைப்பச் சரிப்படுத்துவது போல...

இன்று நம் நாட்டின் ஆபத்தான வீக்கம் வற்ற வேண்டுமானால், சீனாவின் சுவடுகளைப் பின்பற்றுவதில் தவறில்லை. அங்கு பெயருக்குதான் கம்யூனிஸ அரசாங்கம். ராணுவ அளவிலேயே கம்யூனிஸ கட்டுப்பாடு நின்றுவிட்டது. பொருளாதாரம் முழுக்க மார்க்கெட் ஃபோர்ஸ் எனப்படும் டிமான்ட் - சப்ளை கைக்குப் போய்விட்டது.

ஆனால் எப்போதெல்லாம் அதை நிலைப்படுத்த வேண்டி வருகிறதோ அப்போது அரசின் தலையீடு முழுமையாக இருக்கிறது.

இரும்புத் திரை போட்ட நாடு என வர்ணிக்கப்பட்ட தொன்னூறுகளிலேயே சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் டாக்டர் நாகநாதன் (இன்றைய தமிழக திட்டக்குழு துணைத் தலைவர்), சொன்ன உண்மை இது.

பணவீக்கத்தில் நாடு தள்ளாட்ட நடைபோட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், நாம் அரசுக்கு வைக்கும் யோசனைகள் இதுதான்.


நன்றி.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கழகத்தில் பொருளியலில் பிஎச்டி பட்டம் பெற்றவர்)


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்

No comments: