Saturday, August 9, 2008

இந்த 'வீக்கம்' எப்போது குறையும்?

டாக்டர் எஸ்.ஷங்கர்

விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்டாவியுடன் சேர்த்து தூக்கம் கண்களைச் சுழற்றும்.

அத்தனைச் சிக்கல் கொண்ட வறட்டுச் சமாச்சாரம்தான், ஆனால் அலுத்துக் கொள்ளாமல் தொடருங்கள்.

காரணம் இதில்தான் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் இருக்கு!

எப்போதெல்லாம் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கிறதோ அப்போது விலைகள் கட்டுக்கடங்காமல் போகும். அதிகரிக்கும் பணப் புழக்கத்துக்கேற்ப நாட்டில் பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு (production and supply) இல்லாத நிலையில் பொருட்களின் விலை ஒன்றுக்குப் பத்து மடங்காகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

பங்குகள் மீதான யூக வாணிபம், குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது, அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களின் விலை உயர்வது எல்லாமே இந்த அளிப்புக்கும் தேவைக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைப் பெரிதாக்கி பணவீக்கத்தை வெடிக்குமளவுக்குக் கொண்டு போய்விடுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே 7.14 சதவிகிதம் வரை இருந்த பணவீக்க அளவை, பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றியதன் மூலம் மட்டுமே மேலும் 3 சதவிகிதம் உயர்த்தியது மாதிரி!

இது ஒரு எளிய விளக்கம். இதற்கு மார்ஷல்ஸ், கீன்ஸ், மார்க்ஸ் என பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களுக்குப் போனால் விடிந்துவிடும். அதனால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்.

எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

விர்ரென்று ஏறிக் கொண்டேயிருக்கும் பணவீக்கத்தைக் கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டுவர, மத்திய ரிசர்வ் வங்கிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசின் பணக் கொள்கைகளை வகுப்பதும் நேரம் பார்த்து திறம்பட செயல்படுத்துவம் ரிசர்வ் வங்கியின் கையில்தான் உள்ளது.

ஆனால் அந்த ரிசர்வ் வங்கியிலும் அரசியல் விளையாடிய ஆட்டம் இருக்கிறதே... வெளியே சொன்னால் கேவலம். சி.ரங்கராஜன் கவர்னராக இருந்த காலம் வரை ரிசர்வ் வங்கிக்கு தெளிவான பணவியல் கொள்கைகளை நமது அரசு வகுத்துக் கொடுக்கவே இல்லை அல்லது வகுத்துக் கொள்ள விடவும் இல்லை என்பதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு!

இதைப் பின்னாளில் அவரே ஒரு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷயத்துக்கு வருவோம்...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முதல் ஆயுதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை அதிகரிப்பது.

இந்த ஆயுதத்தைத்தான் இப்போது கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. அது என்ன ரொக்க இருப்பு விகிதம்? ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு வணிக வங்கியும் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தை ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைத்துக் கொண்டுதான் தனது வர்த்தகத்தைக் கையாள வேண்டும்.

அதைத்தான் ரொக்க இருப்பு விகிதம் என்கிறார்கள்.

அரசின் பணவியல் கொள்கையில் இதற்கு மிக முக்கிய இடம் உண்டு. பணப் புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், வங்கிகள் அளிக்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை உதவும். இந்த ரொக்க இருப்பு விகிதத்தை ஆண்டுக்காண்டு பொருளாதார நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்போனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வசமுள்ள ஒரே சட்டப்பூர்வ ஆயுதம் இந்த ரொக்க இருப்பு விகித கட்டுப்பாடுதான்.

எவ்வளவு உயர்த்தலாம்?

அதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி ஒரேயடியாக உயர்த்திவிட முடியாது.

உதாரணம்: ஒரு வங்கி ரூ.20000 கோடி வரை வர்த்தகத்தைக் கையாளுவதாகக் கொள்வோம். அதில் 1800 கோடி வரை ரிசர்வ் வங்கியில் ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும்.

ஒரு வேளை, திடீரென பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரிசர்வ் வங்கி இந்த ரொக்க இருப்பை 2300 கோடியாக அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி மூலம் வெளியில் செல்லும் பணத்தில் ரூ.500 கோடி வரை கட்டுப் படுத்தப்படுகிறது.

ஒரு வங்கி மூலம் மட்டுமே இந்த அளவு பணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் (கிளைகள் அல்ல) மூலமும் கட்டுப்படுத்தப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பாருங்கள்...

இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?

மத்திய ரிசர்வ் வங்கி இம்முறை முன்தேதியிட்டு 8.75 சதவிகிதமாக சிஆர்ஆரை உயர்த்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 முதல் 5 கட்டங்களாக புதிய சிஆர்ஆர் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஏப்ரல் 26 முதல் மே 10 வரையிலான 15 நாட்களுக்கு 0.25 சதவிகிதம், மே-11 முதல் 25-ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு 0.25 சதவிகிதம் என இரண்டரை மாதங்களுக்கு மொத்தம் 1.25 சதவிகித அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 7.5 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக சிஆர்ஆர் உயர்கிறது.

பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அது பொருட்களின் உற்பத்தியையும், அளிப்பையும் அதிகரிப்பது மற்றும் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது. ஆனால் நமது அரசியல்வாதிகள் அதற்கு எந்த அளவு ஒத்துவருவார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே.

இந்திய அரசால் இப்போதைக்கு உற்பத்தியை அதிகரிக்க முடியாது. பணப் புழக்கத்தின் அளவை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். அதற்கு தோதான ஆயுதம்தான் வங்கிகள் மூலம் தாராளமாகப் பணம் பாய்வதைத் தடுத்து நிறுத்துவது.

சரி, இந்த ரொக்கத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் பொருளின் விலை குறைந்து விடுமா...?

குறைய வேண்டும் என்பது பொருளாதார விதி. ஆனால் சத்தியமாகக் குறையாது என்பது நடைமுறை!பின்னே பணவீக்கம் எப்படிக் கட்டுக்குள் வரும்?பொதுமக்களின் வாங்கும் சக்தியைக் கணிசமாகக் குறைப்பதன் மூலமும் விலையைக் குறைக்க முடியுமல்லவா...

ரிசர்வ் வங்கி, ரொக்க இருப்பை அதிகரித்தால் வங்கிகள் தங்கள் பங்குக்கு, வட்டி விகிதத்தை தாறுமாறாக உயர்த்தும். வீட்டுக் கடன்கள், நுகர்வோர் கடன்கள் போன்றவற்றுக்கான முன்னுரிமை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும். அல்லது, உயர்ந்துவிட்ட வட்டியைப் பார்த்து நாமாகவே கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்வோம்.

இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் எல்லாம் சம்பளப் பணத்தில் மட்டுமே வாங்கியவையென்று கூற முடியுமா... பல்வேறு நுகர்வுக் கடன்கள்தானே வண்ணமிகு பயன்பாட்டுப் பொருட்களாக வந்திறங்குகின்றன.

இந்த கடன் வசதி நின்று போனால் தானாகவே வாங்கும் சக்தியும் நின்றுபோகும் அல்லவா... அப்போது பொருட்களின் அளிப்பு, வெளியில் புழங்கும் பணத்தின் அளவுக்கேற்ப சமநிலைப்படும். விலையும் ஒரு கட்டுக்குள் வரும்.

இருப்பவர் வாங்குவார். இல்லாதவர் அதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி காலத்தை ஓட்டுவார்.

யாருக்கு பாதிப்பு?

மைக்ரோசாஃப்ட், இன்ஃபோஸிஸ், எச்சிஎல் போன்ற பெரும் பணக்கார ஐடி நிறுவன ஊழியர்களை இந்தப் பண வீக்கமோ, பணமந்தமோ அல்லது வங்கிகள் உயர்த்தப் போகும் வட்டி விகிதமோ ஒன்றும் செய்து விடாது.

சொல்லப்போனால் இந்தப் பண வீக்கத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கு மேலும் 20 முதல் 40 சதவிகிதம் வரை சம்பள உயர்வு கிடைத்துவிடும். ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நிலைதான் படு பாதாளத்துக்குப் போகும்.

உற்பத்தியாளன் என்று சொல்லப்படும் அடித்தட்டு வர்க்கம் தன் தேவையைச் சுருக்கிக் கொள்ளும் அவலமும், 23 வயது ஒயிட் காலர் ஐடி இளைஞர்கள் ஆயிரங்களை அள்ளி இறைத்து தங்களுக்கு வேண்டியதை அனுபவிக்கும் போக்கும் அதிகரிக்கும்.

பொருளாதார- சமூகக் குற்றங்கள் பெருகவும் அது வழிவகுக்கும். பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது ஒரு வகை முதலுதவி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

ஆனால் இதுவே நிரந்தரத் தீர்வல்ல.

நிரந்தரத் தீர்வு நிறைய இருக்கு... இந்தியாவிலாவது 11.05 சதவிகிதம். சீனாவில் ஒருகட்டத்தில் பணவீக்கத்தின் அளவு மிக மிக அதிகம், அதாவது 15 சதவிகிதம். ஆனால் அவர்களது பொருளாதாரம் சரிந்து விழுந்து விடவில்லை. கடந்த ஜனவரி மாதம் விண்ணுக்குப் போன விலைகள் இன்று மெல்ல தரையைத் தொடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அது எப்படி... அடுத்த பகுதியில்...!

நன்றி- தட்ஸ்தமிழ்

No comments: