Friday, August 29, 2008

ஏற்கெனவே திருமணமான பாய் பிரண்டை மணக்கிறார் ஷில்பா!

விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என அறிவித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
இந்த முறை வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், தனது வருங்காலக் கணவர் யார் என்பதையும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி மனைவியுடன் வசிக்கும் தனது நீண்ட நாள் பாய் பிரண்ட் ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் ஷில்பா.
இந்திப் படவுலகில் மார்க்கெட் இழக்கும் தருணத்தில் பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் ஷில்பா ஷெட்டி. பல கோடி ரூபாய் பரிசுகளும் புகழும் அவருக்குக் குவிந்தன. கிட்டத்தட்ட உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யாவுக்கு நிகராகப் பேசப்படும் நடிகையாகி விட்டார் ஷில்பா.

இப்போது அவர் கைவசம் இந்திப் படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் வாய்ப்புகளும் நிறைய உள்ளன. விரைவில் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான குவாண்டம் ஆப் சோலேஸில் இரண்டு நிமிட சிறப்புக் காட்சியில் தோன்றுகிறார் ஷில்பா.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வடிவமான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பும் ஷில்பாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இத்தனைப் புகழ், பணம் சேர்ந்த பின் வாழ்க்கையில் செட்டிலாவதுதானே முறை?

அந்த முயற்சியில்தான் ஷில்பாவும் இறங்கியிருக்கிறார்.
எப்போது திருமணம் என்று கேட்டால், இப்போது என்ன அவசரம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி வந்தவர், இப்போது அடிக்கடி திருமணம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

ராஜ் குந்த்ரா என்பவரைத்தான் ஷில்பா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம். ஷில்பாவின் நெடு நாள் பாய் பிரண்ட் இந்த ராஜ் குந்தர். அதுமட்டுமல்ல... இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கவிதா என்ற மனைவியும் உள்ளார்.

"தற்போது என் கைவசமுள்ள பொறுப்புகளை முடித்துத் தரவே எனக்கு குறைந்த்து ஒரு வருடம் ஆகும். அதற்கப்புறம் கல்யாணத்துக்கு 6 மாதங்களாவது டைம் வேண்டாமா... ஆனால் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு, என்கிறார் ஷில்பா.

எல்லாம் சரிதான், இந்தக் கல்யாணத்துக்கு ராஜ் குந்தரின் மனைவி ஒப்புக் கொள்வாரா?

பங்கு வர்த்தகத்தில் மோகன் லால்!

கொச்சி: நடிப்பில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் தன்னை கேரளாவின் சூப்பர் ஸ்டார் என்று நிரூபிக்க முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது பிரபல நடிகர் மோகன்லால்.

ஓட்டல் பிஸினெஸ், சினிமா திரையரங்கங்கள், மல்டிபிளக்ஸ்கள் என தனது வியாபார எல்லைகளை விஸ்தரித்து வந்த அவர், இப்போது பங்கு வர்த்தகத்திலும் தீவிரமாக இறங்கிவிட்டார்.


இதற்காக, பேபி மரைன் எக்ஸ்போர்ட்ஸ், பெடக்ஸ் செக்யூரிட்டீஸ், சுமார்ட் பைனான்சியல் தாக்கர் குரூப் மற்றம் தொழிலதிபர் எஸ்.எம்.ஷெக்டே போன்றோருடன் கைகோர்த்துள்ளார்.


இதற்காக மோகன் லால் துவங்கியுள்ள நிறுவனம் ‘ஹெட்ஜி ஈகுவிட்டீஸ்’ . இந்த நிறுவனம் விரைவில் தன் செயல்பாடுகளை துவக்க விருக்கிறது. கேரள அரசின் ஜியோஜித் பைனான்ஸூக்கு நிகராக இந்நிறுவனத்தின் வணிகத்தைப் பெருக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் மோகன்லால்.
எனவேதான் கேரளா முழுவதும் 15 கிளைகள் திறக்கப்பட உள்ளதோடு, தமிழகம், ஆந்திராவிலும் கூட கூடுதலாக கிளைகள் திறக்க முடிவெடுத்துள்ளார் மோகன்லால்.


ஜியோஜித் போலவே, பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி உட்பட பல வகையான நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ‘ஹெட்ஜி ஈகுவிட்டீஸ்’ வழங்க உள்ளது.


இந்திய அளவில் பங்கு வர்த்தகத்தில் இவ்வளவு பிரமாண்டமான திட்டங்களுடன் ஈடுபடும் முதல் நடிகர் மோகன்லால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

என்.டி.ஆர். பாணியில் சிரஞ்சீவியும் ரதயாத்திரை!

ஐதராபாத்: மறைந்த என்.டி.ராமாராவ் பாணியில் சமீபத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கிய சிரஞ்சீவியும் விரைவில் ரத யாத்திரை துவங்குகிறார். தனது கட்சிக்கு மக்களிடம் ஆதரவு கேட்டு, ஆந்திரா முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரத யாத்திரை செல்கிறார்.

இதற்கான திட்டங்களை அவருடைய உதவியாளர்களும், பல கட்சிகளில் இருந்து அனுபவம் பெற்று தற்போது சிரஞ்சீவி கட்சிக்கு வந்துள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களும் வகுத்து வருகிறார்கள்.

ஆந்திர சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் ஆதரவைத் திரட்டிவிட வேண்டும் என்பது சிரஞ்சீவியின் நோக்கம்.
இந்த ரத யாத்திரையே சிரஞ்சீவியின் தேர்தல் பிரசாரமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

53 வயதான சிரஞ்சீவி, கபு சமுதாயத்தை சேர்ந்தவர். ஆந்திராவில் 100 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்த சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே, முதல் கட்டமாக இந்த தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார்.

அடுத்த கட்டமாக, விஜயசாந்தி குறிவைத்துள்ள தெலுங்கானாவில் உள்ள 100 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என அவரது கட்சி வட்டாரங்கள் தகவல் பரப்பி வருகின்றன.

மறைந்த என்.டி.ராமராவ் 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 9 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார். பின்னர் அவரது ஆட்சியை மூத்த அமைச்சர் பாஸ்கர ராவ் உடனிருந்து கவிழ்த்தார்.

இதைத் தொடர்ந்து மக்களிடம் நீதி கேட்டு என்.டி.ராமராவ் மாநிலம் முழுவதும் வேனில் பிரசார பயணம் மேற்கொண்டார். இந்த பிரசார பயணத்துக்கு சைதன்ய ரதயாத்திரை என்று பெயர் சூட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் என்டிஆர். அதே பிரசார பாணியை சிரஞ்சீவியும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.

பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்தது!

உணவு அல்லாத உற்பத்திப் பொருட்களின் விலை யில் ஏற்பட்டுள்ள திடீர் விலைக் குறைவு காரணமாக பணவீக்கம் 0.23 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடாந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 12.63 சதவிகிதமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச பணவீக்க அளவு இது.
இந்த வாரம், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மற்ற 30 முக்கியப் பொருட்களின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. கனிமப் பொருட்கள், எரிபொருள், மின்சாரம், எண்ணெய், உலோகமல்லாத கனிமங்கள் ஆகியவற்றின் விலை எதிர்ப்பார்ப்புக்கு மாறாக குறைந்து காணப்பட்டது.

இதன் விளைவாக பணவீக்கமும் 0.23 சதவிகிதம் குறைந்து 12.40-க்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது உண்மையில் மிக நல்ல அறிகுறி. இப்போதுதான் ஓரளவு நிம்மதியாக உணர்கிறேன். வரும் நாட்களில் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புகிறேன், என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தப் போக்கு தற்காலிகமானது என்றும், பணவீக்கம் 14 புள்ளிகள் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியது நினைவிருக்கலாம்.
உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் ஏற்படக்கூடிய விலைக் குறைவுதான் பணவீக்கத்தின் போக்கை தீர்மானிக்கும் நிஜ காரணிகள். அதில் ஒரு நிலைத் தன்மை வரும்வரை இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தொடரும், என்கிறார் ரங்கராஜன்.
பணவீக்கத்தின் போக்கை மேலும் குறைக்க வங்கி வட்டி, மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயர்த்தும் திட்டத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி.

Monday, August 25, 2008

இந்தியா - 62: பொருளாதார சுதந்திரம் எப்போது?

டாக்டர் எஸ். ஷங்கர்
இவர்கள் வல்லரசாகப் போகிறார்களா... சும்மா ஜோக் பண்ணாதீங்க. தங்களுக்குள் இருக்கிற ஜாதியையும் வறுமையையும் ஜெயிக்க முடியாத இவர்கள் என்றைக்கு உலகை ஜெயிப்பது?
– 2020-ல் இந்தியா உலகின் வலிமை மிக்க வல்லரசாகிவிடும் என்ற டாக்டர் அப்துல் கலாமின் கனவைக் கேலி செய்து இங்கிலாந்தின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட ஒரு கட்டுரையின் சாரம் இதுதான்!
ஆனால் கங்காரு தன் குட்டியைச் சுமப்பது போல, ஒரு பக்கம் தன் வறுமையைச் சுமந்து கொண்டே, லஞ்சம், வகுப்புவாதம், மொழி வெறி, ஜாதித் துவேஷம், எப்போதும் வளர்ச்சிக்கு நந்திகளாய் திகழும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என எக்கச்சக்க ஸ்பீட் பிரேக்கர்களைத் தாண்டி இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறது இந்தியா.

அப்படியென்றால் நாம் உண்மையிலேயே வளர்ந்து விட்டோமா... நாம் வளர்ந்துவிட்ட மாயம் நமக்கே புரியாமல்தான் இருக்கிறோமா...
இந்தியப் பொருளாதாரத்தின் நிஜமான வலிமை என்ன?

ஒரு சின்ன பிளாஷ்பேக்...
டாக்டர் ராபின்ஸன் மற்றும் எம்.என். ராயின் வார்த்தைகளில் சொல்வதானால், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனத்தை பிரிட்டிஷ்காரர்கள் தொடங்கிய 17-ம் நூற்றாண்டில், அமெரிக்கா என்ற தேசமே பழங்குடியினரின் பூமியாய் இருந்த காலத்தில், உலகின் மொத்த உற்பத்தியில் பிரிட்டனின் பங்கு கிட்டத்தட்ட 2 சதவிகிதம். இந்தியாவின் பங்கு 22 சதவிகிதம். (அட, நாமதான் வல்லரசு அன்றைக்கு!)
இத்தனைக்கும் அன்று இந்தியா ஒன்றுபட்ட தேசமல்ல. 700க்கும் மேற்பட்ட சிற்றரசுகள், சுதந்திர சமஸ்தானங்கள் மற்றும் நிஜாம்களாக இருந்தது. அப்படி பிளவுண்டு கிடந்த தேசத்தின் பொருளாதார வளத்தை மொத்தமாக கணக்கெடுத்துச் சொன்னவரும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரிதான். அந்தப் புள்ளி விவரங்கள்தான் இந்தியாவின் மீது பிரிட்டிஷ்காரர்களின் பிடி இறுகக் காரணமாகிவிட்டது.

அடுத்து வந்த 100 ஆண்டுகளில் பிரிட்டிஷ் பொருளாதாரத்தின் உலகப் பங்களிப்பு 9 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தியா பின்னடைந்த நாடுகளுள் ஒன்றாக மாறிப்போனது.
பெருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த தேசம் பிற்போக்கு சக்திகளின் பிடிக்குள் போய்விட, மதங்களும் ஜாதீயமும் பொருளாதாரத்தின் வேரறுத்து, வளர்ச்சியை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன... போகப்போக உலகின் குப்பைத் தொட்டியாகி வறுமை, நோய்களின் தேசமாக மாறிப்போனது...’
- எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
ஜனநாயகம் இப்போது வேண்டாம்!
நேரு, இந்திராவின் காலத்தில் பொருளாதாரம் முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே பிரதானப்படுத்தியபடி நகர்ந்தது. அவர்களின் காலத்தில் வளர்ச்சிக்கான முயற்சிகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டன என்பதை விட SURVIVAL FACTORS-க்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
குற்றுயிரும் குலையுயிருமாக வந்த இந்தியப் பொருளாதாரத்தை உயிரோடு வைத்துக் கொள்வதில் நேரு மிகுந்த அக்கறை காட்டினார். இந்திராவோ பொருளாதாரத்தோடு சேர்த்து தன் அரசியலையும் உயிருடன் வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருந்தது.
இதனால்தான் ஒரு கட்டத்தில், இந்தியாவுக்கு மக்களாட்சி முறை பொருந்தாது என அவர் முடிவு செய்து அதை செயலிலும் காட்ட முயன்று தோற்றார் (ஏதாவது ஒரு பக்கத்திலாவது முழுமையாக எதிர்ப்புகளே இல்லாமல் இருந்தால், என்னால் இந்தியாவில் பல மாறுதல்களைக் கொண்டுவர முடியும் – பிரதமர் இந்திரா காந்தி, 1975).
‘இந்தியா போன்ற பின்தங்கிய, விழிப்புணர்வற்ற தேசத்துக்கு கொஞ்சகாலம் சர்வாதிகாரமே சிறந்தது. சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்திய பிறகு, ஜனநாயகத்தைக் கொண்டுவரலாம்’ என்ற Hardliner சஞ்சய் காந்தியின் யோசனைகள் இந்திராவுக்கும் சரியாகவே தோன்றின அன்றைக்கு.

இந்த முடிவுக்கு அவர் வர இன்னொரு முக்கியக் காரணம், அடுத்தடுத்து இரு ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது.
ஒரு குழந்தையை ராணுவக் கட்டுப்பாட்டோடு வளர்த்து பின்னர், சாதாரண வாழ்க்கைக்குத் திருப்புவது ஒரு வளர்ப்பு முறை.
வறுமை, பசி, வன்முறை, நிச்சயமற்ற நிலை போன்ற முரட்டுச் சூழலில் வளர்த்தெடுப்பது ஒரு முறை.
இந்திரா காந்தி இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க விரும்பியது முதல் சூழலில். ஆனால் தன் முயற்சிகள் தோற்றதைப் பார்த்த பிறகுதான் போக்கை மாற்றிக் கொண்டார். இந்தியப் பொருளாதாரம் கடுமையான இந்த இரண்டாவது சூழலிலேயே வளரட்டும் என விட்டுவிட்டார்.
விளைவு, 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வெற்றி கண்டோம். பசுமைப் புரட்சியால், உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவும் பெற்றோம்.

இது ராஜீவ் போட்டுக்கொடுத்த ரூட்!
சுதந்திர இந்தியாவின் சிற்பி என நேருவைப் புகழந்தாலும், நவீன இந்தியாவின் சிற்பி என்னமோ ராஜீவ் காந்திதான். இந்த வாதம் உங்களுக்கு சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ராஜீவ் தன் ஆட்சிக் காலத்தின் இறுதி நாட்களில் செய்த தவறுகள், அவரது அரசியல் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் இங்கே வேண்டாம்.
அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இன்றைய பொருளாதார வளர்ச்சி (மற்றும் பணவீக்க நெருக்கடி) இரண்டுக்குமே ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ராஜீவ் காந்திதான்.
அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இன்று உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் டாப் 10 நாடுகளுள் நாமும் ஒன்றாக மாறியிருக்கிறோம்.

கனவு மெய்ப்பட...
ராஜீவ், விபி சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் என பிரதமர்கள் மாறினாலும் பொருளாதார வளர்ச்சிக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் போராட்டத்துக்கு நடுவே வளர்ந்த பொருளாதாரம் என்பதால் எந்தத் தடுமாற்றத்தையும் தாங்கும் சக்தியைப் பெற்றுள்ளோம்.
‘பொக்ரான் அணு சோதனை – இந்தியா மீது பொருளாதாரத் தடை’ அதையும் தாங்கிக் கொண்டோம். அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் மேலும் சில தடைகள், அதையும் தாங்கினோம். காட் ஒப்பந்தத்தில் இந்தியாவை கொண்டுபோய் வகையாகச் சிக்க வைத்தார்கள், அதையும் சமாளிக்கிறோம். ஐஎம்எப், உலக வங்கி இரண்டும் கழுத்துக்கு வைத்த கத்திகளிலிருந்தும் தக்க நேரம் பார்த்துத் தப்பித்துக் கொண்டோம்.
இடையில் ஓயாத மதச் சண்டைகள், அரசியல் நிலையில்லாமை.... இதுவும் கடந்து போகும் என்ற தத்துவத்தைச் சொல்லியபடி அவற்றையும் தாண்டி பயணத்தைத் தொடர்கிறோம்.
அதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.

கடுமையான சூழலில் வளரும் ஒரு மனிதன் எந்தச் நெருக்கடியையும் சமாளிக்கும் அளவு தெளிவாக இருப்பான் அல்லவா... இந்தியப் பொருளாதாரமும் அப்படி ஒரு நிலைக்கு வரும் என்பதுதான் 2020-ல் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியபோது டாக்டர் கலாமின் எதிர்பார்ப்பாக இருந்தது.

‘வெறும் கனவல்ல நான் காண்பது... இந்தியாவின் வரலாற்றைப் படித்தவன். சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளை முழுமையாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்தியா வல்லரசாவது 2020-ல் நிச்சயம் நடக்கும்’, என்கிறார் கலாம் இப்போதும் அதே உறுதியுடன்.

ஆனாலும் நம்மை நாமே பல விஷயங்களில் வென்று வரவேண்டிய கட்டாய சூழல் இன்றைக்கு. கலாமின் கனவு நிறைவேறும் முன் நாம் நிச்சயமாக வெல்ல வேண்டிய தீய சக்திகள் இவைதான்...
பல பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்தியாவில் குவிகிறது. 2000 புள்ளிகளுக்குள்ளேயே நொண்டியடித்துக் கொண்டிருந்த பங்குச் சந்தை 15000 புள்ளிகளைத் தாண்டிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் வறுமை வாட்டுகிறது.

ஐடி, எஞ்சினியரிங் பட்டதாரிகள் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க, அரசு கலைக் கல்லூரிகளில் படித்தவர்கள் சம்பளம் 3000 ரூபாயைத் தாண்ட யோசிக்கிறது.
3.5 கோடி பேர் நல்ல சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள், 350 மில்லின் மக்கள் இன்னும் வறுமையில் கிடக்கிறார்கள். 23 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் இந்தியா என்ற தேசம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டுக் கிடந்திருக்கலாம். ஆனால் இந்த வார்த்தையைச் சொன்ன பாரதிக்குப் பின் வந்த காலத்தில் கல்வியில் தாழ்வுற்ற நிலையிலிருந்து மீண்டிருக்கிறோம்.
இன்று நம் அறிவுக் கண்கள் திறந்தேயிருக்கின்றன. ஆனால் தெரிந்தே மூடத்தனத்தை ஆராதிக்கும் போக்கு... அதிலிருந்து விடுபடுவது மிக முக்கியம்.
இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும்போதே நாடி நரம்புகள் முறுக்கேறி உணர்ச்சி வசப்படுவதெல்லாம் சரிதான்... ஆனால் பக்கத்து மாநிலத்துக்காரனுக்குத் தண்ணீர் தரவேண்டுமென்றதும் பஸ்களையும் அப்பாவிகளையும் கொளுத்தும் பிற்போக்குத் தனத்தை எப்போது விடப் போகிறோம்?
கல்வி வேலை வாய்ப்புகளில், தமக்குக் கீழே உள்ள சக இந்தியன் ஒருவன் மேலேறி வரட்டும் என பரந்த மனப்பான்மையோடு எப்போது கைகொடுக்கப் போகிறோம்? அல்லது அப்படிக் கைகொடுக்கும் அரசின் முயற்சிகளை எப்போது முடக்காமல் இருக்கப் போகிறோம்?
அரசு நடப்பது லாப நஷ்டக் கணக்கு பார்க்க அல்ல... இது மக்கள் பணத்தில் நடக்கிற அரசு. பெட்ரோலியம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறபோது மக்களுக்காக மாநில அரசுகள் தங்கள் வரிகளைக் குறைத்து, பணவீக்கம் குறைய எப்போது உதவப் போகின்றன?
முதலில் இவற்றை வென்றால்தான் நாம் உலகப் பொருளாதாரத்தை நிஜமாகவே வென்றெடுக்க முடியும். அந்த வெற்றியையும் உணர, அனுபவிக்க முடியும்!
ஜெய்ஹிந்த்!

Monday, August 11, 2008

ஒலிம்பிக்: இந்தியாவின் முதல் தங்க மகனுக்கு பரிசுகள் குவிகின்றன!!


பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் பதக்கம் 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்குக் கிடாத்த முதல் பதக்கம்மட்டுமல்ல, ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கமும் கூட.

இவருக்கு அடுத்தபடியாக சீனாவின் கினான்-ஷு வெள்ளிப் பதக்கத்தையும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹக்கினென் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். எனினும், இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ககன் நரங், ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தவற விட்டார்.
இப்போட்டியின் 6வது சுற்றில் 9.917 புள்ளிகளுடன் இருந்த ககன் நரங், அடுத்த சுற்றில் 98 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதில் மற்ற வீரர்கள் 99 அல்லது 100 புள்ளிகளை எடுத்ததால் ககன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவுக்கு 9வது ஒலிம்பிக் தங்கம்:
கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அப்பதக்கம் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8வது தங்கப்பதக்கம்.
அந்த பதக்கம் வெல்லப்பட்டு 28 ஆண்டுகள் பின்னர் தற்போது அபினவ் பிந்த்ரா 9வது தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றுள்ளார்.
ஒரு கோடி பரிசு!
இந்தியாவுக்கு முதல் தனி நபர் தங்கம் வென்ற அப்நவ்வுக்கு பஞ்சாப் மாநில அரசு ரூ.1 கோடி பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் ஒ‌ட்டு மொ‌த்த இ‌ந்‌தியாவு‌க்கு‌ம் அ‌பின‌‌வ் ‌பி‌ந்‌த்ரா பெருமை சே‌ர்‌த்து‌ள்ளதாக பஞ்சாப் முதலமை‌ச்ச‌ர் ‌பிரகா‌ஷ் ‌சி‌ங் பாத‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல், அ‌ரியானா மா‌நில முதலமை‌ச்ச‌ர் பூ‌‌பிந்த‌ர் ‌சி‌ங் ஹூடா, ‌பி‌ந்‌த்ராவு‌க்கு ரூ.25 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்குவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


Sunday, August 10, 2008

கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவு!

பேரலுக்கு 120 டாலரானது கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெயின் விலை மேலும் 4 டாலர்கள் குறைந்து பேரலுக்கு 120 டாலர் என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இந்த அளவு விலை குறைவது இதுவே முதல் முறை.
ஜூலை மத்தியில் 147 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கப் பொருளாதாரத்தின் இறங்குமுகம் மற்றும் அமெரிக்கர்களின் நுகர்வுக் குறைவு காரணமாக 27 டாலர்கள் குறைந்துள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர்களுக்குள் வந்துவிடும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பயமுறுத்தும் ஈரான்!
ஆனால் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைவதும், விண்ணைத் தொடுமளவுக்கு உயர்வதும் இப்போது ஈரானின் கையில் உள்ளதாக உலக நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. காரணம் தனது அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சோதனை முயற்சிகளை இன்னமும் அந்நாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அணு ஆயுத சோதனையை ஈரான் நிறுத்திக் கொள்ள இந்த வார இறுதி வரை ஐநாவின் பாதிகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்த உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி போன்றவை கெடுவிதித்திருந்தன. ஆனால் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை ஈரான். இதனால் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்கத் தயாராகிறது ஐ.நா. (அதாவது அமெரிக்காவும் இங்கிலாந்தும்!)

ஈரான் மீது போர்தொடுக்கும்படி ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஒருவேளை நிலைமை எல்லை மீறிப்போனால், ஹோர்மோஸ் (Hormoz) நீர் சந்திப்பை ஈரான் தகர்க்கும் அபாயமுள்ளது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்குத் தேவையான 40 சதவிகித கச்சா எண்ணெய் ஓபெக் (OPEC) நாடுகளிலிருந்து வந்தாக வேண்டும். ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த வழித்தடத்தை ஈரான் அடைத்துவிட்டாலோ அல்லது அந்த வழியாக வரும் டேங்கர் கப்பல்களைத் தகர்க்க ஆரம்பித்துவிட்டாலோ, எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிடும்.
எனவேதான் ஈரான் மீதான நடவடிக்கையை இன்னும் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றன அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!