Thursday, September 18, 2008

லேமன் பிரதர்ஸ் விவகாரம்: ஐ.சி.ஐ.சி.ஐ.க்கு எந்த பாதிப்பும் இல்லையாம்!

சென்னை: லேஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை

அவ் வங்கியின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி சந்தா கோச்சார் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 3, 2008 அன்றைய நிலவரப்படி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் மொத்த சொத்து மதிப்பு ரூ.4, 84, 643 கோடி ரூபாய்.

அதேபோல ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - யுகே பிஎல்சியின் (ஐசிஐசிஐயின் பிரிட்டன் கிளை) சொத்து மதிப்பு அன்றைய தேதியில் 8.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிஎல்சிதான் 57 மில்லியன் யூரோ (தோராயமாக 80 மில்லியன் டாலர்) அளவுக்கு முதலீடு செய்துள்ளது. இது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி யுகே பிஎல்சியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இந்த பத்திரங்களுக்கு எதிரான முதலீட்டில் 12 மில்லியன் டாலருக்கு நிகரான ஒதுக்கீட்டை (ரூ.54 கோடி) ஐ.சி.ஐ.சி.ஐ. யுகே பிஎல்சி ஏற்கனவே பெற்று விட்டது.

மேலும் 50 சதவீத திரும்பப் பெறும் வாய்ப்பை கணக்கிட்டால் தேவைப்படும் கூடுதல் ஒதுக்கீடு என்பது 28 மில்லியன் டாலராக மட்டுமே இருக்கும்.

எனவே லேஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி யுகே பிஎல்சிக்கோ வேறு எந்த பாதிப்பும் இல்லை.

இதை முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், என அவர் கூறியிருக்கிறார்.

 

No comments: