Monday, September 8, 2008

சீரியல், சித்ரா, ஜோதிகா, சினேகா... லேகா! – ஒரு வெள்ளி விழா கதை!


ஒவ்வொரு வெற்றிகரமான மனிதரின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாரோ இல்லையோ... நிச்சயம் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தே இருக்கின்றன.


இவைதான் வளரும் தலைமுறைக்கான பாடங்களாகவும் மாறுகின்றன.
தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளரான லேகா ரத்னகுமாரின் 25 ஆண்டுகால கேரியர் அப்படி பல சவால்கள் நிறைந்ததுதான். இத்தனைக்கும் இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, அந்த சவாலை ஜெயிக்க நிறைய போராட்டங்களைச் சந்தித்து இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் லேகா.
இன்று அவரது லேகா புரொடக்ஷன்ஸூக்கு 25வது ஆண்டு... வெள்ளி விழா.
இதுகுறித்து லேகா ரத்னகுமார் இப்படிக் கூறுகிறார்:

விருதுநகரில் பிறந்தேன். நல்ல வசதியான குடும்பம். கல்யாணமாகி மனைவி குழந்தை என வீட்டில் செட்டிலாகிவிட்ட தருணத்தில், அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன். அந்த சண்டை ஒருவாரம் கூட நீடிக்க வில்லை என்றாலும், அதற்குப் பிறகு வீடு திரும்ப மனம் வரவில்லை.
என் நண்பர் ஷங்கர் கொடுத்த 50 ரூபாயுடன் கோவைக்கு வந்தேன். சொல்லப் போனால் அதுதான் என் முதல் முதலீடு.

இரண்டு நாள் பிளாட்பார வாசம். அப்போதுதான் ஆர்எஸ் புரம் ஜங்கஷனில் ஒரு பெரிய ஊதுபத்தி விளம்பரம் பார்த்தேன். நேராக அந்த முதலாளியிடம் போனேன். பெருமுயற்சிக்குப் பிறகு பார்த்தேன். என் ஐடியாக்களைச் சொன்னேன். முதல் ஆர்டர் கிடைத்தது. அதில் வந்த லாபம் ரூ.8000. அதன்பிறகு நிற்க நேரமில்லாமல் ஓடினேன். வரிசையாக பல வேலைகள்... சென்னைக்கு வந்தேன்.

அப்போதுதான் இதயம் நல்லெண்ணெய்க்கு ஒரு விளம்பரப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்... என்ற அந்த விளம்பரம்தான் என்னை பெரிய அளவு அடையாளம் காட்டியது.
தொடர்ந்து பல எண்ணெய்க் கம்பெனிகள் படமெடுக்க அழைத்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டேன். இனி ஒரே எண்ணெய் நிறுவனத்துக்கு மட்டுமே விளம்பரம் படங்கள் எடுப்பது என்பதே அது. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு தர்மம் வேண்டும்.
எண்பதுகளில் தொலைக்காட்சித் தொடர் எடுப்பதில் பல சாதனைகளை லேகா புரொடக்ஷன்ஸ் செய்துள்ளது.

எழுத்தாளர் ராஜோஷ்குமாரின் கதையை இருட்டில் ஒரு வானம்பாடி எனும் தொடராக எடுத்தேன். ஒரு திரைப்படத்துக்கு நிகரான பரபரப்புடன் பேசப்பட்ட தொடர் அது. அஞ்சாதே அஞ்சு போன்ற தொடர்கள் இன்றும் பேசப்படுகின்றன...” என்கிறார் ரத்னகுமார்.

பொதுவாக பிரபல முகங்களை வைத்து விளம்பரப் படங்கள் எடுத்து பொருளைப் பிரபலபர்படுத்துவார்கள். ஆனால் ரத்னகுமாரின் படமாக்கும் உத்தி, வேகமாக படப் பதிவு போன்றவை சித்ரா, ஜோதிகா, சினேகா என பிரபலங்களை இன்னும் பிரபலமாக்கியது.

சித்ராவும், ஜோதிகாவும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பிறகு, அந்த அடைமொழியோடே அழைக்கப்பட்டார்கள்.

திட்டமிடல் என்பது பிஸினெஸ்மேனுக்கு மட்டுமல்ல, திரைக்கலைஞர்களுக்கும் மிக அவசியம். அந்தத் திட்டமிடல்தான் ரத்னகுமாரின் லேகா புரொடக்ஷன்ஸை வெள்ளி விழா கொண்டாட வைத்துள்ளது. ரத்னகுமாரை ஹாலிவுட் வரை கொண்டு போயிருக்கிறது.
ஆம், இவரது இசை ஆல்பங்களை இன்று ஹாலிவுட் படங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே க்ளோவர்பீல்ட் படத்தில் இவரது ட்ராக் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல இந்திய அளவில் தயாரிப்பாளர்களுக்கு தேவைப்படும் இசையை ஏற்கெனவே உருவாக்கி வைத்து தருபவரும் லேகா ரத்னகுமார் ஒருவர்தான். ஜெர்மனியின் சொனாட்டான் நிறுவனத்துடன் இணைந்து லேகா சொனாட்டான் எனும் பெயரில் இவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு பெரும் அளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. தமிழில் பாக்யராஜ் படம், விஜய் டிவி, ஜெயா டிவி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசை, பிளேடு தீனாவின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான பின்னணி இசை... எல்லாமே லேகாவின் பங்களிப்புதான்.

இப்போது தனது வெள்ளிவிழா ஆண்டில் புதிய திரைப்படம் ஒன்றை மேகா ராஜ் எனும் புதுமுகத்தை வைத்துப் படமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் ரத்னகுமார்.

இந்தப் படமும் வெள்ளிவிழா கொண்டாடட்டும்!

No comments: