Wednesday, September 3, 2008

ஆந்திராவில் தமிழ் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஐதராபாத்தில் பல தமிழ்ப் படங்களின் படப் பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
இன்றைக்கு பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில்தான் நடக்கிறது. குறிப்பாக ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கே கோடம்பாக்கம் இடம் பெயர்ந்து விட்டதோ எனும் அளவுக்கு இங்கே ஏராளமான படப்பிடிப்புகள் நடக்கின்றன.

சென்னையில் பகலில் படப்பிடிப்புகள் நடத்தவும் சாலைகளில் படப்பிடிப்பு நடத்தவும் தடை விதித்திருப்பதே இதற்கு காரணம். ஆனால், இப்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது, சண்டைக் காட்சியில் தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது, அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தருகிறார்கள். இப்போது அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு தமிழ்ப் படத்திலும் 30 சதவீத தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வேலை தர வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஆந்திராவில் எந்த இடத்திலும் தமிழ் படங்களின் சண்டைக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலை கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

வரும் 16-ம் தேதி சென்னையில் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் இப்பிரச்னைக்கு குறித்து பேச உள்ளனர். அதுவரை தமிழ் படங்களின் ஸ்டன்ட் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டும் ஆந்திராவில் நடக்காது, எனத் தெரிகிறது.

No comments: