Monday, September 8, 2008

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி!!

சென்னை: இந்தியா ஏழை நாடல்ல... ஏழையாக்கப்பட்டிருக்கும் நாடு என்பதை நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தொண்டு நிறுவனம் ஒனறு.

அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!!

இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்பு பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்யூஸ் -எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் கிளை
மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது.
பின்னர் இந்த அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்க நெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக இந்த புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
அதிர வைக்கும் கறுப்புப் பணம்!
இந்தியாவின் கறுப்புப் பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்.
அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் நாடு எங்கேயோ போய்விடும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் விழாது. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும், என்றார் பூமானந்தா.

அரசியலில் துவங்கும் முதல் ஊழல்!
மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவின் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறுகையில். நாம் நினைத்தால் ஊழலை எளிதில் ஒழிக்க முடியும். அதறஅகு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியலில்தான் துவங்குகிறது..
சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான், என்றார் விட்டல்.

No comments: