Wednesday, September 3, 2008

நானோ ஆலை- இழுத்து மூடியது டாடா!!

மம்தா பானர்ஜியின் தொடர் மிரட்டல்கள் மற்றும் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளால் வெறுத்துப் போன டாடா நிறுவனம் சிங்கூரில் அமைத்துக் கொண்டிருந்த நானோ கார் தொழிற்சாலையை இன்று இழுத்து மூடியது.

இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றுதல் குறித்து விரிவாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதே நேரம் வாக்குறுதியளித்தபடி நானோ காரை, டாடாவின் வேறு தொழிற்கூடத்திலிருந்து உற்பத்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் டாடா அதிபர் ரத்தன் டாடா நேற்று மாலை அறிவித்துள்ளார்.

முன்னதாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரத்தன் டாடா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இப்போதைய சூழலில் நானோ தொழிற்சாலையை பிரச்சினையின்றி இயக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது. நாங்கள் இந்தத் தொழிற்சாலையை மேற்கு வங்கத்துக்குக் கொண்டு வந்தது இந்த மாநிலத்துக்கு மேலும் மதிப்பைக் கூட்டவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும்தான். ஆனால் இந்த மாநில மக்கள் ஆதரவு இல்லாமல் அது நடக்க வாய்ப்பே இல்லை.

நானோ தொழிற்சாலையைச் சுற்றிலும் இன்றைக்கு நிலவும் சூழல் மோசமாக உள்ளது, என்கிறார் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர்.

வேறு தொழிற்சாலை, வேறு மாநிலம்...

நானோ தொழிற்சாலைக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அவர்களது தொழிற் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்ததால், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி நான்கு தினங்களுக்கு முன்பு தொழிற்சாலைப் பணிகளை நிறுத்தியது டாடா.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், ஒரிஸா, ஆந்திரா, உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில அரசுகள், நானோ தொழிற்சாலையை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வந்து விடுமாறும், சகல வசதிகளையும் தாங்கள் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தன.

நானோ தொழிற்சாலைக்காக டாடா நிறுவனத்துக்கு 997.11 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்திக் கொடுத்தது மேற்கு வங்க அரசு. இதில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை அத்துமீறி அரசு எடுத்துள்ளதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக டாடாவின் ஒரு லட்ச ரூபாய் மக்கள் கார் நானோ அக்டோபரில் விற்பனைக்கு வருவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.

No comments: