Thursday, September 18, 2008

ஏஐஜிக்கு உதவி: அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு!!

நியூயார்க்: லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் வரிசையில் இன்னொரும மிகப் பெரிய சர்வதேச நிதி நிறுவனம் ஏஐஜியும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

ஏஐஜி எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிதி நிறுவனம் உலகம் முழுக்க கிளை பரப்பியுள்ள மிகப் பெரிய காப்பீட்டு நிதி அமைப்பாகும்.

இந்த அமைப்பு திரட்டியுள்ள கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்த வங்கிகள் உள்ளிட்ட பிற அமைப்புகள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற முண்டியடித்ததால், திடீரென்று நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது ஏஐஜி.

இதைச் சமாளிக்க ரூ.1,80,000 கோடி ரூபாயைத் திரட்ட முயன்றது ஏஐஜி. ஆனால் எந்த வங்கியும் நிதி உதவி வழங்க முன் வரவில்லை. இந்நிலையில் ஏஐஜியும் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஏற்கெனவே லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் சரிவால் திண்டாடிப் போயுள்ள அமெரிக்க மற்றும் அதன் சார்புடைய நாடுகளின் பொருளாதாரம், இந்த சரிவாயும் தாங்க முடியாது என்பதால், இப்போது அமெரிக்க அரசே ஏஐஜிக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி செய்து சரிவிலிருந்து காப்பாற்றியுள்ளது.

மக்கள் எதிர்ப்பு!

ஆனால் இந்த முடிவுக்கு அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

அமெரிக்க அரசு மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு, ஊதாரித்தனமான காரியங்களிலும், தவறான முதலீடுகளிலும் பணத்தைக் கோட்டை விட்ட நிறுவனங்களைக் காப்பாற்றுவதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இந்த எதிர்ப்புக்காக, ஏஐஜியை அம்போவென விட்டுவிட முடியாத நிலை அமெரிக்க நிதித் துறைக்கு.

இப்போது இந்த நிறுவனம் ஒருவேளை மூழ்கிவிட்டால், இதில் தங்கள் காப்பீடு செய்துள்ள சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறைத்து மறுமதிப்பீடு செய்ய வேண்டி வரும்.

அப்படியொரு சூழல் வந்தால் உலகப் பொருளாதாரமே தடுமாறிவிடும். பெருமந்தம் போன்றதொரு சூழல் மீண்டும் வந்தாலும் வியப்பதற்கில்லை என அஞ்சுகின்றனர் அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள்.

இது ஒரு நச்சு சுழல் மாதிரிதான். ஏஐஜிக்கு ஏற்படும் பெரும் இழப்பு, உலக நிறுவனங்களின் முதலீடுகளை அதல பாதாளத்துக்குத் தள்ளிவிடும். இதைத் தவிர்க்கத்தான் இப்போது அமெரிக்கா அரசு உதவிக் கரம் நீட்டியுள்ளது. மற்றபடி ஏஐஜியின் முதலீடுகள் எந த அளவு மோசமானவை என்பது அரசுக்கும் தெரியும், என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் ரெய்ன்ஹார்ட்.

என்னதான் சமாதானம் சொன்னாலும், அமெரிக்க அரசின் இந்த உதவி அரசியல் ரீதியாக புஷ் நிர்வாகத்துக்கு பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒழுங்குமுறை இல்லாததே காரணம்!

இப்படி ஒரு சூழல் மீண்டும் மீண்டும் தேன்றக் காரணம் நிதி நிறுவனங்களிடையே ஒழுங்குமுறையின்மைதான். ஒவ்வொரு முறையும் தனியார் நிதி நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவிப்பதும், அவற்றை மீட்க அரசு வருவதும் மிக மோசமான போக்கு, என்கிறார் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி.

இந்த விஷயத்தில் இன்னும் சில தினங்களில் கடுமையான பிரச்சினைகளை புஷ் நிர்வாகம் சந்திக்க உள்ளது. யார் யாரோ பட்ட கடன்களுக்கு அமெரிக்க மக்களின் பணத்தில் நிவாரணம் தரப் பார்ப்பது மிகப் பெரிய மோசடி என்கிறார் அவர்.

அதேநேரம் கடந்த வாரம் திவாலான லேஹ்மன் பிரதர்ஸ் மற்றும் அடிமாட்டு விலைக்கு கைமாறிய மெர்ரில் லின்ஜ் ஆகிய நிதி நிறுபவனங்கள் உதவி கோரியபோது கைவிரித்த புஷ் நிர்வாகம், ஏஐஜிக்கு மட்டும் உதவியிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனாலும் இந்த உதவிக்கு ஈடாக, ஏஐஜியின் மொத்த சொத்துகளில் 80 சதவிதத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது நிதித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

 டாடா ஏஐஜிக்கு பெரும் பின்னடைவு!

ஏஐஜி நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் இரு கூட்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது. தற்போதைய நெருக்கடி காரணமாக பெரும் பின்னடைவை இந்நிறுவனங்கள் சந்தித்துள்ளன.

ஏஐஜி நிதி நெருக்கடியால் அதன் இந்திய நிறுவனங்களில் காப்பீடு செய்துள்ள மக்களின் பணத்துக்கு பாதிப்புகள் வருமா என்பது குறித்து சரியான தகவல்களைத் தருமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் டாடா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதால், மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தனியார் துறை நிறுவனங்கள் காப்பீட்டில் கொடிகட்டிப் பறந்த்தும், பின்னர் திடீரென ஒருநாள் காணாமல் போனதையும் அனுபவித்துள்ள மக்கள், மீண்டும் அப்படி ஒரு மோசமான சூழல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஆனாலும் டாடாவின் பலமான பின்னணி இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை என டாடா ஏஐஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சென்னைப் பிரிவு உள்பட நாடு முழுவதும் 11750 ஊழியர்கள் பணியில் உள்ளனர். மக்களிடமிருந்து பெற்ற காப்பீட்டுப் பணத்தில் 1000 மில்லியன் டாலர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளாக வைத்துள்ளது இந்த நிறுவனம்.

ஏஐஜி வரலாறு  

மௌரீஸ் கிரீன்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம்தான் ஏஐஜி. 2005-ல் கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக அவர் தூக்கியெறியப்படும் வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை உலகம் முழுக்க தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஏஐஜி.

இந்த காலகட்டத்தில்தான் மோசடியான காப்பீடுகள் பலவற்றுக்கு பணம் கொடுத்து போண்டியாகும் சூழலுக்கும் தள்ளப்பட்டது. விமான நிறுவனங்கள் மோ இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் மோசடியான வீட்டுக் கடன்களுக்குக் காப்பீடு பெற்றிருந்தனர். கிரீன்பர்க் போன பிறகு ஏஐஜி தன்னை மறு சீரமைப்பு செய்வதில் முனைந்தது.

ஆனால் அதற்குள் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டு இப்போது அமெரிக்க அரசின் தயவில் தப்பிப் பிழைத்துள்ளது.

ஏஐஜியின் இந்த வரலாறு தெரிந்ததால்தான், இந் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்யக்கூடாது என அமெரிக்கர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் ஒரு முறை இந் நிறுவனம் சிக்கலில் மாட்டினால், ‘அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்’!!  

No comments: