Thursday, September 18, 2008

வளைகுடா முழுக்க ஒரே கரன்ஸி திட்ட வரைவுக்கு ஒப்புதல்!

வளைகுடா நாடுகள் முழுமைக்கும் இனி ஒரே விதமான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் திட்ட வரைவுக்கு 5 வளைகுடா நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் இப்போது ஒரே விதமான நாணய முறை யூரோ (ஐரோப்பிய யூனியன்) எனும் பெயரில் புழக்கத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சக்தி வாய்ந்த நாணயமாக இருந்து அமெரிக்க டாலரையே மிஞ்சும் அளவுக்கு மதிப்பு மிக்க கரன்ஸியாக யூரோ மாறியிருக்கிறது.

இப்போது ஐரோப்பிய நாடுகளின் வழியில் ஆசிய கண்டம் முழுமைக்கும் ஒரே விதமான கரன்ஸியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து  வருகின்றன ஆசிய நாடுகள். ஆனால் இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் திட்டம் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் வளைகுடா பகுதியில் உள்ள நாடுகள் முழுமைக்கும் ஒரே விதமான நாணயத்தை (single currency system) புழக்கத்தில் சில வளைகுடா நாடுகள் முயற்சி மேற்கொண்டன. 

இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த்து. இதில் வளைகுடா நாடுகளின் ஐந்து முக்கிய நிதியமைச்சர்கள் பங்கேற்று, ஒரே நாணய திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

வருகிற நவம்பர் மாதம் மஸ்கட் நகரில் நடக்கவுள்ள அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் திட்டத்தின் முழு வடிவம் சமர்ப்பிக்கப்பட்டு, செயலாக்க நடைமுறைக்கும் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

ஜெட்டா கூட்டத்தில் பங்கேற்றபின் கத்தார் நாட்டின் நிதி அமைச்சர் யூசுப் கமால் கூறுகையில், இப்போது எந்த மாறுதலும் செய்யாமல் ஒரே நாணயத் திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்றார்.

இந்த திட்டத்துக்காக 2001-ல் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் கவுன்சிலை சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகள் ஏற்படுத்தின. ஆனால் இதிலிருந்து கடைசி நிமிடத்தில் ஓமன் கழன்று கொள்ள, மற்ற 5 நாடுகளும் ‘கல்ஃப் யூனியன்’ என்ற கருத்தில் உறுதியாக நிற்கின்றன.

No comments: