Monday, September 8, 2008

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி!!

சென்னை: இந்தியா ஏழை நாடல்ல... ஏழையாக்கப்பட்டிருக்கும் நாடு என்பதை நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தொண்டு நிறுவனம் ஒனறு.

அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!!

இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்பு பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்யூஸ் -எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் கிளை
மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது.
பின்னர் இந்த அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்க நெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக இந்த புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
அதிர வைக்கும் கறுப்புப் பணம்!
இந்தியாவின் கறுப்புப் பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்.
அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் நாடு எங்கேயோ போய்விடும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் விழாது. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும், என்றார் பூமானந்தா.

அரசியலில் துவங்கும் முதல் ஊழல்!
மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவின் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறுகையில். நாம் நினைத்தால் ஊழலை எளிதில் ஒழிக்க முடியும். அதறஅகு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியலில்தான் துவங்குகிறது..
சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான், என்றார் விட்டல்.

இன்று முதல் சன் குழும காமெடி திரை ஒளிபரப்பு!

24 மணி நேரமும் மக்களைச் சிரிக்க வைக்க ஒரு புதிய சேனலை சன் நெட்வொர்க் இன்று முதல் அறிமுகப்படுத்துகிபறது.

காமெடித் திரை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிரிப்புச் சேனலில் முழுக்க முழுக்க சிரிப்புத் துணுக்குகள், நகைச் சுவைக் காட்சிகள், நகைச்சுவைத் திரைப்படங்கள், மற்றும் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சன் குழுமத்துக்கு ஏற்கெனவே சன்டிவி, கேடிவி, சன் நியூஸ், சுட்டி டிவி, சன் மியூசிக் ஆகிய 5 தமிழ் சேனல்கள் உள்ளன. இப்போது ஆறாவதாக காமெடித் திரை ஆரம்பமாகிறது.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஏராளமான சேனல்களை நிர்வகித்து வருகிறது சன் குழுமம். கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்கள் தொலைக்காட்சியான சுட்டி டிவிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் புதிய முயற்சியில்
இறங்கியுள்ளதாக சன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீரியல், சித்ரா, ஜோதிகா, சினேகா... லேகா! – ஒரு வெள்ளி விழா கதை!


ஒவ்வொரு வெற்றிகரமான மனிதரின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாரோ இல்லையோ... நிச்சயம் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தே இருக்கின்றன.


இவைதான் வளரும் தலைமுறைக்கான பாடங்களாகவும் மாறுகின்றன.
தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளரான லேகா ரத்னகுமாரின் 25 ஆண்டுகால கேரியர் அப்படி பல சவால்கள் நிறைந்ததுதான். இத்தனைக்கும் இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, அந்த சவாலை ஜெயிக்க நிறைய போராட்டங்களைச் சந்தித்து இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் லேகா.
இன்று அவரது லேகா புரொடக்ஷன்ஸூக்கு 25வது ஆண்டு... வெள்ளி விழா.
இதுகுறித்து லேகா ரத்னகுமார் இப்படிக் கூறுகிறார்:

விருதுநகரில் பிறந்தேன். நல்ல வசதியான குடும்பம். கல்யாணமாகி மனைவி குழந்தை என வீட்டில் செட்டிலாகிவிட்ட தருணத்தில், அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன். அந்த சண்டை ஒருவாரம் கூட நீடிக்க வில்லை என்றாலும், அதற்குப் பிறகு வீடு திரும்ப மனம் வரவில்லை.
என் நண்பர் ஷங்கர் கொடுத்த 50 ரூபாயுடன் கோவைக்கு வந்தேன். சொல்லப் போனால் அதுதான் என் முதல் முதலீடு.

இரண்டு நாள் பிளாட்பார வாசம். அப்போதுதான் ஆர்எஸ் புரம் ஜங்கஷனில் ஒரு பெரிய ஊதுபத்தி விளம்பரம் பார்த்தேன். நேராக அந்த முதலாளியிடம் போனேன். பெருமுயற்சிக்குப் பிறகு பார்த்தேன். என் ஐடியாக்களைச் சொன்னேன். முதல் ஆர்டர் கிடைத்தது. அதில் வந்த லாபம் ரூ.8000. அதன்பிறகு நிற்க நேரமில்லாமல் ஓடினேன். வரிசையாக பல வேலைகள்... சென்னைக்கு வந்தேன்.

அப்போதுதான் இதயம் நல்லெண்ணெய்க்கு ஒரு விளம்பரப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்... என்ற அந்த விளம்பரம்தான் என்னை பெரிய அளவு அடையாளம் காட்டியது.
தொடர்ந்து பல எண்ணெய்க் கம்பெனிகள் படமெடுக்க அழைத்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டேன். இனி ஒரே எண்ணெய் நிறுவனத்துக்கு மட்டுமே விளம்பரம் படங்கள் எடுப்பது என்பதே அது. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு தர்மம் வேண்டும்.
எண்பதுகளில் தொலைக்காட்சித் தொடர் எடுப்பதில் பல சாதனைகளை லேகா புரொடக்ஷன்ஸ் செய்துள்ளது.

எழுத்தாளர் ராஜோஷ்குமாரின் கதையை இருட்டில் ஒரு வானம்பாடி எனும் தொடராக எடுத்தேன். ஒரு திரைப்படத்துக்கு நிகரான பரபரப்புடன் பேசப்பட்ட தொடர் அது. அஞ்சாதே அஞ்சு போன்ற தொடர்கள் இன்றும் பேசப்படுகின்றன...” என்கிறார் ரத்னகுமார்.

பொதுவாக பிரபல முகங்களை வைத்து விளம்பரப் படங்கள் எடுத்து பொருளைப் பிரபலபர்படுத்துவார்கள். ஆனால் ரத்னகுமாரின் படமாக்கும் உத்தி, வேகமாக படப் பதிவு போன்றவை சித்ரா, ஜோதிகா, சினேகா என பிரபலங்களை இன்னும் பிரபலமாக்கியது.

சித்ராவும், ஜோதிகாவும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பிறகு, அந்த அடைமொழியோடே அழைக்கப்பட்டார்கள்.

திட்டமிடல் என்பது பிஸினெஸ்மேனுக்கு மட்டுமல்ல, திரைக்கலைஞர்களுக்கும் மிக அவசியம். அந்தத் திட்டமிடல்தான் ரத்னகுமாரின் லேகா புரொடக்ஷன்ஸை வெள்ளி விழா கொண்டாட வைத்துள்ளது. ரத்னகுமாரை ஹாலிவுட் வரை கொண்டு போயிருக்கிறது.
ஆம், இவரது இசை ஆல்பங்களை இன்று ஹாலிவுட் படங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே க்ளோவர்பீல்ட் படத்தில் இவரது ட்ராக் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல இந்திய அளவில் தயாரிப்பாளர்களுக்கு தேவைப்படும் இசையை ஏற்கெனவே உருவாக்கி வைத்து தருபவரும் லேகா ரத்னகுமார் ஒருவர்தான். ஜெர்மனியின் சொனாட்டான் நிறுவனத்துடன் இணைந்து லேகா சொனாட்டான் எனும் பெயரில் இவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு பெரும் அளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. தமிழில் பாக்யராஜ் படம், விஜய் டிவி, ஜெயா டிவி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசை, பிளேடு தீனாவின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான பின்னணி இசை... எல்லாமே லேகாவின் பங்களிப்புதான்.

இப்போது தனது வெள்ளிவிழா ஆண்டில் புதிய திரைப்படம் ஒன்றை மேகா ராஜ் எனும் புதுமுகத்தை வைத்துப் படமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் ரத்னகுமார்.

இந்தப் படமும் வெள்ளிவிழா கொண்டாடட்டும்!

Wednesday, September 3, 2008

ஆந்திராவில் தமிழ் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஐதராபாத்தில் பல தமிழ்ப் படங்களின் படப் பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
இன்றைக்கு பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில்தான் நடக்கிறது. குறிப்பாக ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கே கோடம்பாக்கம் இடம் பெயர்ந்து விட்டதோ எனும் அளவுக்கு இங்கே ஏராளமான படப்பிடிப்புகள் நடக்கின்றன.

சென்னையில் பகலில் படப்பிடிப்புகள் நடத்தவும் சாலைகளில் படப்பிடிப்பு நடத்தவும் தடை விதித்திருப்பதே இதற்கு காரணம். ஆனால், இப்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது, சண்டைக் காட்சியில் தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது, அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தருகிறார்கள். இப்போது அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு தமிழ்ப் படத்திலும் 30 சதவீத தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வேலை தர வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஆந்திராவில் எந்த இடத்திலும் தமிழ் படங்களின் சண்டைக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலை கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

வரும் 16-ம் தேதி சென்னையில் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் இப்பிரச்னைக்கு குறித்து பேச உள்ளனர். அதுவரை தமிழ் படங்களின் ஸ்டன்ட் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டும் ஆந்திராவில் நடக்காது, எனத் தெரிகிறது.

நானோ ஆலை- இழுத்து மூடியது டாடா!!

மம்தா பானர்ஜியின் தொடர் மிரட்டல்கள் மற்றும் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளால் வெறுத்துப் போன டாடா நிறுவனம் சிங்கூரில் அமைத்துக் கொண்டிருந்த நானோ கார் தொழிற்சாலையை இன்று இழுத்து மூடியது.

இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றுதல் குறித்து விரிவாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதே நேரம் வாக்குறுதியளித்தபடி நானோ காரை, டாடாவின் வேறு தொழிற்கூடத்திலிருந்து உற்பத்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் டாடா அதிபர் ரத்தன் டாடா நேற்று மாலை அறிவித்துள்ளார்.

முன்னதாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரத்தன் டாடா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இப்போதைய சூழலில் நானோ தொழிற்சாலையை பிரச்சினையின்றி இயக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது. நாங்கள் இந்தத் தொழிற்சாலையை மேற்கு வங்கத்துக்குக் கொண்டு வந்தது இந்த மாநிலத்துக்கு மேலும் மதிப்பைக் கூட்டவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும்தான். ஆனால் இந்த மாநில மக்கள் ஆதரவு இல்லாமல் அது நடக்க வாய்ப்பே இல்லை.

நானோ தொழிற்சாலையைச் சுற்றிலும் இன்றைக்கு நிலவும் சூழல் மோசமாக உள்ளது, என்கிறார் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர்.

வேறு தொழிற்சாலை, வேறு மாநிலம்...

நானோ தொழிற்சாலைக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அவர்களது தொழிற் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்ததால், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி நான்கு தினங்களுக்கு முன்பு தொழிற்சாலைப் பணிகளை நிறுத்தியது டாடா.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், ஒரிஸா, ஆந்திரா, உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில அரசுகள், நானோ தொழிற்சாலையை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வந்து விடுமாறும், சகல வசதிகளையும் தாங்கள் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தன.

நானோ தொழிற்சாலைக்காக டாடா நிறுவனத்துக்கு 997.11 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்திக் கொடுத்தது மேற்கு வங்க அரசு. இதில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை அத்துமீறி அரசு எடுத்துள்ளதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக டாடாவின் ஒரு லட்ச ரூபாய் மக்கள் கார் நானோ அக்டோபரில் விற்பனைக்கு வருவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.

Saturday, August 30, 2008

அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!

டெல்லி: அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பணிகளை வெளியாட்களுக்குத் தரும் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேணடும். அமெரிக்கர்களையே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் ஓபாமா கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓபாமா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அமெரிக்க நிறுவனங்கள் அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். அமெரிக்கர்கள் மயமாக தொழில் நிறுவனங்கள் இருக்க வேண்டும்.

நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ரத்து செய்வேன். அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கப்படுவதை முற்றிலுமாகத் தடுப்பேன்.

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

ஓபாமாவின் இந்தப் பேச்சு இந்திய தொழில் துறையினரை குறிப்பாக ஐடி துறையினரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இன்றைக்கு இந்தியப் பொருளாதார வளரச்சியில் இந்த அவுட் சோர்சிங் வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்றாலும் ஒபாமாவின் இந்தப் பேச்சுக்கு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அண்ணா நூற்றாண்டு விழா: ரூ.1-க்கு கிலோ அரசி!!

சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1க்கு விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக,நியாய விலைக் கடைகளில் தற்போது வழங்கப்படும் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை தொடர்ந்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

அதேபோல, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.2 வீதம் 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நூற்றாண்டு விழா தொடக்க நாளான செப்டம்பர் 15 முதல் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரையும், தமிழக அரசையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வேண்டிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கிலோ அரிசி ரூ.1க்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைக்காரர்கள் பயனடைவார்கள்.

இது குறித்து இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி கிலோ அரிசி ரூ.2க்கு தற்போது வழங்கி வருகிறது.

இந்நிலையில் விலையை மேலும் குறைத்து ரூ.1க்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி குறித்து வதந்தி:

முன்னதாக முதல்வர் கருணாநிதி குறித்து சென்னையின் சில இடங்களில் இன்று வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று சிலர் முதல்வர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பினர். இதையடுத்து திமுக கொடிக் கம்பங்களில் இருந்த கொடிகளை அரைக் கம்பத்திலும் பறக்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அது வதந்தி என்று தெரிய வந்ததால் உடனடியாக கொடிகள் சரியான முறையில் பறக்க விடப்பட்டன.