Friday, September 19, 2008

இந்திய வங்கிகள் நிதி நிலை வலுவாக உள்ளது! – ப.சிதம்பரம்


 புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி இருப்பு  நிலைமை வலுவாக இருப்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரபலமான லேஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலாகி விட்டது. இதனால், இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தப்ரோதைய விவகாரங்களை ஆராய மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:

லேஹ்மன் பிரதர்ஸ் திவாலானதால் இந்தியாவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வலுவாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் பற்றிய தகவல்களை ரிசர்வ் வங்கி கவர்னரும், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரும் எனக்கு தெரிவித்துள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் நிதி நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. இந்திய வங்கிகளின் இருப்பு நிலை நல்ல முறையில் உள்ளது.

ஆயிரம் கோடி ஸ்காலர்ஷிப்

 கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் படிக்கும்  மாணவர்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க மந்திரி சபை ப்புதல் அளித்துள்ளது.

எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.1,260 கோடியே 80 லட்சத்துக்கு ஸ்காலர்ஷிப் திட்டம் தொடங்கப்படுகிறது. இதனால் 5 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பலனடைவார்கள்.

எச்.எம்.டி. (வாட்ச்) லிமிட், இந்துஸ்தான் கேபிள் லிட், பாரத் வேகான் என்ஜீனியரிங் கம்பெனி லிட் போன்ற நட்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.79 கோடியே 70 லட்சம் அளிக்கப்படும், என்றார் சிதம்பரம்.

மந்திரி சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இதர முடிவுகள் குறித்து அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியிருப்பதாவது:  

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பாக மொகாலி நகரில் `நானோ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்' அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. 11- வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.142 கோடியே 45 லட்சம் செலவில் இந்த நிறுவனம் அமைக்கப்படும்.

பாசுமதி அரிசி போன்ற முக்கிய விளைபொருட்கள் மற்றும் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கவும் உணவு தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா-மாலத்தீவு இடையே விமானங்களை இயக்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், பிரான்சில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக அந்த நாட்டுடன் செய்து கொண்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது, என்றார் தாஸ்முன்ஷி

 

Thursday, September 18, 2008

லேமன் பிரதர்ஸ் விவகாரம்: ஐ.சி.ஐ.சி.ஐ.க்கு எந்த பாதிப்பும் இல்லையாம்!

சென்னை: லேஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை

அவ் வங்கியின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி சந்தா கோச்சார் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூன் 3, 2008 அன்றைய நிலவரப்படி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் மொத்த சொத்து மதிப்பு ரூ.4, 84, 643 கோடி ரூபாய்.

அதேபோல ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி - யுகே பிஎல்சியின் (ஐசிஐசிஐயின் பிரிட்டன் கிளை) சொத்து மதிப்பு அன்றைய தேதியில் 8.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிஎல்சிதான் 57 மில்லியன் யூரோ (தோராயமாக 80 மில்லியன் டாலர்) அளவுக்கு முதலீடு செய்துள்ளது. இது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி யுகே பிஎல்சியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இந்த பத்திரங்களுக்கு எதிரான முதலீட்டில் 12 மில்லியன் டாலருக்கு நிகரான ஒதுக்கீட்டை (ரூ.54 கோடி) ஐ.சி.ஐ.சி.ஐ. யுகே பிஎல்சி ஏற்கனவே பெற்று விட்டது.

மேலும் 50 சதவீத திரும்பப் பெறும் வாய்ப்பை கணக்கிட்டால் தேவைப்படும் கூடுதல் ஒதுக்கீடு என்பது 28 மில்லியன் டாலராக மட்டுமே இருக்கும்.

எனவே லேஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கோ அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி யுகே பிஎல்சிக்கோ வேறு எந்த பாதிப்பும் இல்லை.

இதை முதலீட்டாளர்களும், வாடிக்கையாளர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், என அவர் கூறியிருக்கிறார்.

 

வளைகுடா முழுக்க ஒரே கரன்ஸி திட்ட வரைவுக்கு ஒப்புதல்!

வளைகுடா நாடுகள் முழுமைக்கும் இனி ஒரே விதமான நாணயத்தைப் புழக்கத்தில் விடும் திட்ட வரைவுக்கு 5 வளைகுடா நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் இப்போது ஒரே விதமான நாணய முறை யூரோ (ஐரோப்பிய யூனியன்) எனும் பெயரில் புழக்கத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சக்தி வாய்ந்த நாணயமாக இருந்து அமெரிக்க டாலரையே மிஞ்சும் அளவுக்கு மதிப்பு மிக்க கரன்ஸியாக யூரோ மாறியிருக்கிறது.

இப்போது ஐரோப்பிய நாடுகளின் வழியில் ஆசிய கண்டம் முழுமைக்கும் ஒரே விதமான கரன்ஸியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து  வருகின்றன ஆசிய நாடுகள். ஆனால் இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால் திட்டம் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் வளைகுடா பகுதியில் உள்ள நாடுகள் முழுமைக்கும் ஒரே விதமான நாணயத்தை (single currency system) புழக்கத்தில் சில வளைகுடா நாடுகள் முயற்சி மேற்கொண்டன. 

இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த்து. இதில் வளைகுடா நாடுகளின் ஐந்து முக்கிய நிதியமைச்சர்கள் பங்கேற்று, ஒரே நாணய திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

வருகிற நவம்பர் மாதம் மஸ்கட் நகரில் நடக்கவுள்ள அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் திட்டத்தின் முழு வடிவம் சமர்ப்பிக்கப்பட்டு, செயலாக்க நடைமுறைக்கும் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

ஜெட்டா கூட்டத்தில் பங்கேற்றபின் கத்தார் நாட்டின் நிதி அமைச்சர் யூசுப் கமால் கூறுகையில், இப்போது எந்த மாறுதலும் செய்யாமல் ஒரே நாணயத் திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்றார்.

இந்த திட்டத்துக்காக 2001-ல் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் கவுன்சிலை சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகள் ஏற்படுத்தின. ஆனால் இதிலிருந்து கடைசி நிமிடத்தில் ஓமன் கழன்று கொள்ள, மற்ற 5 நாடுகளும் ‘கல்ஃப் யூனியன்’ என்ற கருத்தில் உறுதியாக நிற்கின்றன.

ஏஐஜிக்கு உதவி: அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு!!

நியூயார்க்: லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் வரிசையில் இன்னொரும மிகப் பெரிய சர்வதேச நிதி நிறுவனம் ஏஐஜியும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

ஏஐஜி எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிதி நிறுவனம் உலகம் முழுக்க கிளை பரப்பியுள்ள மிகப் பெரிய காப்பீட்டு நிதி அமைப்பாகும்.

இந்த அமைப்பு திரட்டியுள்ள கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்த வங்கிகள் உள்ளிட்ட பிற அமைப்புகள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற முண்டியடித்ததால், திடீரென்று நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது ஏஐஜி.

இதைச் சமாளிக்க ரூ.1,80,000 கோடி ரூபாயைத் திரட்ட முயன்றது ஏஐஜி. ஆனால் எந்த வங்கியும் நிதி உதவி வழங்க முன் வரவில்லை. இந்நிலையில் ஏஐஜியும் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஏற்கெனவே லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் சரிவால் திண்டாடிப் போயுள்ள அமெரிக்க மற்றும் அதன் சார்புடைய நாடுகளின் பொருளாதாரம், இந்த சரிவாயும் தாங்க முடியாது என்பதால், இப்போது அமெரிக்க அரசே ஏஐஜிக்கு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி செய்து சரிவிலிருந்து காப்பாற்றியுள்ளது.

மக்கள் எதிர்ப்பு!

ஆனால் இந்த முடிவுக்கு அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.

அமெரிக்க அரசு மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு, ஊதாரித்தனமான காரியங்களிலும், தவறான முதலீடுகளிலும் பணத்தைக் கோட்டை விட்ட நிறுவனங்களைக் காப்பாற்றுவதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இந்த எதிர்ப்புக்காக, ஏஐஜியை அம்போவென விட்டுவிட முடியாத நிலை அமெரிக்க நிதித் துறைக்கு.

இப்போது இந்த நிறுவனம் ஒருவேளை மூழ்கிவிட்டால், இதில் தங்கள் காப்பீடு செய்துள்ள சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறைத்து மறுமதிப்பீடு செய்ய வேண்டி வரும்.

அப்படியொரு சூழல் வந்தால் உலகப் பொருளாதாரமே தடுமாறிவிடும். பெருமந்தம் போன்றதொரு சூழல் மீண்டும் வந்தாலும் வியப்பதற்கில்லை என அஞ்சுகின்றனர் அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள்.

இது ஒரு நச்சு சுழல் மாதிரிதான். ஏஐஜிக்கு ஏற்படும் பெரும் இழப்பு, உலக நிறுவனங்களின் முதலீடுகளை அதல பாதாளத்துக்குத் தள்ளிவிடும். இதைத் தவிர்க்கத்தான் இப்போது அமெரிக்கா அரசு உதவிக் கரம் நீட்டியுள்ளது. மற்றபடி ஏஐஜியின் முதலீடுகள் எந த அளவு மோசமானவை என்பது அரசுக்கும் தெரியும், என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக பேராசிரியர் ரெய்ன்ஹார்ட்.

என்னதான் சமாதானம் சொன்னாலும், அமெரிக்க அரசின் இந்த உதவி அரசியல் ரீதியாக புஷ் நிர்வாகத்துக்கு பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒழுங்குமுறை இல்லாததே காரணம்!

இப்படி ஒரு சூழல் மீண்டும் மீண்டும் தேன்றக் காரணம் நிதி நிறுவனங்களிடையே ஒழுங்குமுறையின்மைதான். ஒவ்வொரு முறையும் தனியார் நிதி நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவிப்பதும், அவற்றை மீட்க அரசு வருவதும் மிக மோசமான போக்கு, என்கிறார் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி.

இந்த விஷயத்தில் இன்னும் சில தினங்களில் கடுமையான பிரச்சினைகளை புஷ் நிர்வாகம் சந்திக்க உள்ளது. யார் யாரோ பட்ட கடன்களுக்கு அமெரிக்க மக்களின் பணத்தில் நிவாரணம் தரப் பார்ப்பது மிகப் பெரிய மோசடி என்கிறார் அவர்.

அதேநேரம் கடந்த வாரம் திவாலான லேஹ்மன் பிரதர்ஸ் மற்றும் அடிமாட்டு விலைக்கு கைமாறிய மெர்ரில் லின்ஜ் ஆகிய நிதி நிறுபவனங்கள் உதவி கோரியபோது கைவிரித்த புஷ் நிர்வாகம், ஏஐஜிக்கு மட்டும் உதவியிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனாலும் இந்த உதவிக்கு ஈடாக, ஏஐஜியின் மொத்த சொத்துகளில் 80 சதவிதத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது நிதித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

 டாடா ஏஐஜிக்கு பெரும் பின்னடைவு!

ஏஐஜி நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் இரு கூட்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது. தற்போதைய நெருக்கடி காரணமாக பெரும் பின்னடைவை இந்நிறுவனங்கள் சந்தித்துள்ளன.

ஏஐஜி நிதி நெருக்கடியால் அதன் இந்திய நிறுவனங்களில் காப்பீடு செய்துள்ள மக்களின் பணத்துக்கு பாதிப்புகள் வருமா என்பது குறித்து சரியான தகவல்களைத் தருமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் டாடா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதால், மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தனியார் துறை நிறுவனங்கள் காப்பீட்டில் கொடிகட்டிப் பறந்த்தும், பின்னர் திடீரென ஒருநாள் காணாமல் போனதையும் அனுபவித்துள்ள மக்கள், மீண்டும் அப்படி ஒரு மோசமான சூழல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஆனாலும் டாடாவின் பலமான பின்னணி இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை என டாடா ஏஐஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் சென்னைப் பிரிவு உள்பட நாடு முழுவதும் 11750 ஊழியர்கள் பணியில் உள்ளனர். மக்களிடமிருந்து பெற்ற காப்பீட்டுப் பணத்தில் 1000 மில்லியன் டாலர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளாக வைத்துள்ளது இந்த நிறுவனம்.

ஏஐஜி வரலாறு  

மௌரீஸ் கிரீன்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம்தான் ஏஐஜி. 2005-ல் கணக்கு வழக்குகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக அவர் தூக்கியெறியப்படும் வரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களை உலகம் முழுக்க தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது ஏஐஜி.

இந்த காலகட்டத்தில்தான் மோசடியான காப்பீடுகள் பலவற்றுக்கு பணம் கொடுத்து போண்டியாகும் சூழலுக்கும் தள்ளப்பட்டது. விமான நிறுவனங்கள் மோ இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் மோசடியான வீட்டுக் கடன்களுக்குக் காப்பீடு பெற்றிருந்தனர். கிரீன்பர்க் போன பிறகு ஏஐஜி தன்னை மறு சீரமைப்பு செய்வதில் முனைந்தது.

ஆனால் அதற்குள் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டு இப்போது அமெரிக்க அரசின் தயவில் தப்பிப் பிழைத்துள்ளது.

ஏஐஜியின் இந்த வரலாறு தெரிந்ததால்தான், இந் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்யக்கூடாது என அமெரிக்கர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் ஒரு முறை இந் நிறுவனம் சிக்கலில் மாட்டினால், ‘அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும்’!!  

Monday, September 8, 2008

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி!!

சென்னை: இந்தியா ஏழை நாடல்ல... ஏழையாக்கப்பட்டிருக்கும் நாடு என்பதை நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தொண்டு நிறுவனம் ஒனறு.

அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!!

இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்பு பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்யூஸ் -எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் கிளை
மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நேற்று நடந்தது.
பின்னர் இந்த அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்க நெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக இந்த புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
அதிர வைக்கும் கறுப்புப் பணம்!
இந்தியாவின் கறுப்புப் பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்.
அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் நாடு எங்கேயோ போய்விடும். மக்கள் மீது எந்த வரிச்சுமையும் விழாது. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும், என்றார் பூமானந்தா.

அரசியலில் துவங்கும் முதல் ஊழல்!
மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவின் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறுகையில். நாம் நினைத்தால் ஊழலை எளிதில் ஒழிக்க முடியும். அதறஅகு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியலில்தான் துவங்குகிறது..
சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான், என்றார் விட்டல்.

இன்று முதல் சன் குழும காமெடி திரை ஒளிபரப்பு!

24 மணி நேரமும் மக்களைச் சிரிக்க வைக்க ஒரு புதிய சேனலை சன் நெட்வொர்க் இன்று முதல் அறிமுகப்படுத்துகிபறது.

காமெடித் திரை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிரிப்புச் சேனலில் முழுக்க முழுக்க சிரிப்புத் துணுக்குகள், நகைச் சுவைக் காட்சிகள், நகைச்சுவைத் திரைப்படங்கள், மற்றும் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.

சன் குழுமத்துக்கு ஏற்கெனவே சன்டிவி, கேடிவி, சன் நியூஸ், சுட்டி டிவி, சன் மியூசிக் ஆகிய 5 தமிழ் சேனல்கள் உள்ளன. இப்போது ஆறாவதாக காமெடித் திரை ஆரம்பமாகிறது.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஏராளமான சேனல்களை நிர்வகித்து வருகிறது சன் குழுமம். கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர்கள் தொலைக்காட்சியான சுட்டி டிவிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் புதிய முயற்சியில்
இறங்கியுள்ளதாக சன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சீரியல், சித்ரா, ஜோதிகா, சினேகா... லேகா! – ஒரு வெள்ளி விழா கதை!


ஒவ்வொரு வெற்றிகரமான மனிதரின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாரோ இல்லையோ... நிச்சயம் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தே இருக்கின்றன.


இவைதான் வளரும் தலைமுறைக்கான பாடங்களாகவும் மாறுகின்றன.
தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளரான லேகா ரத்னகுமாரின் 25 ஆண்டுகால கேரியர் அப்படி பல சவால்கள் நிறைந்ததுதான். இத்தனைக்கும் இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, அந்த சவாலை ஜெயிக்க நிறைய போராட்டங்களைச் சந்தித்து இன்று திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் லேகா.
இன்று அவரது லேகா புரொடக்ஷன்ஸூக்கு 25வது ஆண்டு... வெள்ளி விழா.
இதுகுறித்து லேகா ரத்னகுமார் இப்படிக் கூறுகிறார்:

விருதுநகரில் பிறந்தேன். நல்ல வசதியான குடும்பம். கல்யாணமாகி மனைவி குழந்தை என வீட்டில் செட்டிலாகிவிட்ட தருணத்தில், அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன். அந்த சண்டை ஒருவாரம் கூட நீடிக்க வில்லை என்றாலும், அதற்குப் பிறகு வீடு திரும்ப மனம் வரவில்லை.
என் நண்பர் ஷங்கர் கொடுத்த 50 ரூபாயுடன் கோவைக்கு வந்தேன். சொல்லப் போனால் அதுதான் என் முதல் முதலீடு.

இரண்டு நாள் பிளாட்பார வாசம். அப்போதுதான் ஆர்எஸ் புரம் ஜங்கஷனில் ஒரு பெரிய ஊதுபத்தி விளம்பரம் பார்த்தேன். நேராக அந்த முதலாளியிடம் போனேன். பெருமுயற்சிக்குப் பிறகு பார்த்தேன். என் ஐடியாக்களைச் சொன்னேன். முதல் ஆர்டர் கிடைத்தது. அதில் வந்த லாபம் ரூ.8000. அதன்பிறகு நிற்க நேரமில்லாமல் ஓடினேன். வரிசையாக பல வேலைகள்... சென்னைக்கு வந்தேன்.

அப்போதுதான் இதயம் நல்லெண்ணெய்க்கு ஒரு விளம்பரப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்... என்ற அந்த விளம்பரம்தான் என்னை பெரிய அளவு அடையாளம் காட்டியது.
தொடர்ந்து பல எண்ணெய்க் கம்பெனிகள் படமெடுக்க அழைத்தன. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டேன். இனி ஒரே எண்ணெய் நிறுவனத்துக்கு மட்டுமே விளம்பரம் படங்கள் எடுப்பது என்பதே அது. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு தர்மம் வேண்டும்.
எண்பதுகளில் தொலைக்காட்சித் தொடர் எடுப்பதில் பல சாதனைகளை லேகா புரொடக்ஷன்ஸ் செய்துள்ளது.

எழுத்தாளர் ராஜோஷ்குமாரின் கதையை இருட்டில் ஒரு வானம்பாடி எனும் தொடராக எடுத்தேன். ஒரு திரைப்படத்துக்கு நிகரான பரபரப்புடன் பேசப்பட்ட தொடர் அது. அஞ்சாதே அஞ்சு போன்ற தொடர்கள் இன்றும் பேசப்படுகின்றன...” என்கிறார் ரத்னகுமார்.

பொதுவாக பிரபல முகங்களை வைத்து விளம்பரப் படங்கள் எடுத்து பொருளைப் பிரபலபர்படுத்துவார்கள். ஆனால் ரத்னகுமாரின் படமாக்கும் உத்தி, வேகமாக படப் பதிவு போன்றவை சித்ரா, ஜோதிகா, சினேகா என பிரபலங்களை இன்னும் பிரபலமாக்கியது.

சித்ராவும், ஜோதிகாவும் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பிறகு, அந்த அடைமொழியோடே அழைக்கப்பட்டார்கள்.

திட்டமிடல் என்பது பிஸினெஸ்மேனுக்கு மட்டுமல்ல, திரைக்கலைஞர்களுக்கும் மிக அவசியம். அந்தத் திட்டமிடல்தான் ரத்னகுமாரின் லேகா புரொடக்ஷன்ஸை வெள்ளி விழா கொண்டாட வைத்துள்ளது. ரத்னகுமாரை ஹாலிவுட் வரை கொண்டு போயிருக்கிறது.
ஆம், இவரது இசை ஆல்பங்களை இன்று ஹாலிவுட் படங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே க்ளோவர்பீல்ட் படத்தில் இவரது ட்ராக் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல இந்திய அளவில் தயாரிப்பாளர்களுக்கு தேவைப்படும் இசையை ஏற்கெனவே உருவாக்கி வைத்து தருபவரும் லேகா ரத்னகுமார் ஒருவர்தான். ஜெர்மனியின் சொனாட்டான் நிறுவனத்துடன் இணைந்து லேகா சொனாட்டான் எனும் பெயரில் இவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு பெரும் அளவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. தமிழில் பாக்யராஜ் படம், விஜய் டிவி, ஜெயா டிவி நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசை, பிளேடு தீனாவின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கான பின்னணி இசை... எல்லாமே லேகாவின் பங்களிப்புதான்.

இப்போது தனது வெள்ளிவிழா ஆண்டில் புதிய திரைப்படம் ஒன்றை மேகா ராஜ் எனும் புதுமுகத்தை வைத்துப் படமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் ரத்னகுமார்.

இந்தப் படமும் வெள்ளிவிழா கொண்டாடட்டும்!

Wednesday, September 3, 2008

ஆந்திராவில் தமிழ் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஐதராபாத்தில் பல தமிழ்ப் படங்களின் படப் பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
இன்றைக்கு பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில்தான் நடக்கிறது. குறிப்பாக ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கே கோடம்பாக்கம் இடம் பெயர்ந்து விட்டதோ எனும் அளவுக்கு இங்கே ஏராளமான படப்பிடிப்புகள் நடக்கின்றன.

சென்னையில் பகலில் படப்பிடிப்புகள் நடத்தவும் சாலைகளில் படப்பிடிப்பு நடத்தவும் தடை விதித்திருப்பதே இதற்கு காரணம். ஆனால், இப்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் படங்களின் படப்பிடிப்பு நடக்கும்போது, சண்டைக் காட்சியில் தமிழ் ஸ்டன்ட் கலைஞர்களை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது, அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் வாய்ப்பு தருகிறார்கள். இப்போது அங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்கள் சங்கத்தினர், ஒவ்வொரு தமிழ்ப் படத்திலும் 30 சதவீத தெலுங்கு ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வேலை தர வேண்டும் என கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஆந்திராவில் எந்த இடத்திலும் தமிழ் படங்களின் சண்டைக் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலை கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.

வரும் 16-ம் தேதி சென்னையில் கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் இப்பிரச்னைக்கு குறித்து பேச உள்ளனர். அதுவரை தமிழ் படங்களின் ஸ்டன்ட் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டும் ஆந்திராவில் நடக்காது, எனத் தெரிகிறது.

நானோ ஆலை- இழுத்து மூடியது டாடா!!

மம்தா பானர்ஜியின் தொடர் மிரட்டல்கள் மற்றும் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளால் வெறுத்துப் போன டாடா நிறுவனம் சிங்கூரில் அமைத்துக் கொண்டிருந்த நானோ கார் தொழிற்சாலையை இன்று இழுத்து மூடியது.

இந்தத் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றுதல் குறித்து விரிவாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதே நேரம் வாக்குறுதியளித்தபடி நானோ காரை, டாடாவின் வேறு தொழிற்கூடத்திலிருந்து உற்பத்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் டாடா அதிபர் ரத்தன் டாடா நேற்று மாலை அறிவித்துள்ளார்.

முன்னதாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரத்தன் டாடா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இப்போதைய சூழலில் நானோ தொழிற்சாலையை பிரச்சினையின்றி இயக்க முடியுமா என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது. நாங்கள் இந்தத் தொழிற்சாலையை மேற்கு வங்கத்துக்குக் கொண்டு வந்தது இந்த மாநிலத்துக்கு மேலும் மதிப்பைக் கூட்டவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும்தான். ஆனால் இந்த மாநில மக்கள் ஆதரவு இல்லாமல் அது நடக்க வாய்ப்பே இல்லை.

நானோ தொழிற்சாலையைச் சுற்றிலும் இன்றைக்கு நிலவும் சூழல் மோசமாக உள்ளது, என்கிறார் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர்.

வேறு தொழிற்சாலை, வேறு மாநிலம்...

நானோ தொழிற்சாலைக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அவர்களது தொழிற் சங்கத்தினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்ததால், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி நான்கு தினங்களுக்கு முன்பு தொழிற்சாலைப் பணிகளை நிறுத்தியது டாடா.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், ஒரிஸா, ஆந்திரா, உத்தரகண்ட், ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநில அரசுகள், நானோ தொழிற்சாலையை தங்கள் மாநிலத்துக்கு கொண்டு வந்து விடுமாறும், சகல வசதிகளையும் தாங்கள் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தன.

நானோ தொழிற்சாலைக்காக டாடா நிறுவனத்துக்கு 997.11 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்திக் கொடுத்தது மேற்கு வங்க அரசு. இதில் 400 ஏக்கர் விவசாய நிலத்தை அத்துமீறி அரசு எடுத்துள்ளதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு திருப்பித் தரவேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி.

இந்தப் பிரச்சினைகள் காரணமாக டாடாவின் ஒரு லட்ச ரூபாய் மக்கள் கார் நானோ அக்டோபரில் விற்பனைக்கு வருவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.